புதுடெல்லி: களமசேரி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கேரளாவின் கொச்சி அருகேயுள்ள களமசேரியில் நேற்று நடைபெற்ற ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் 1 சிறுமி மற்றும் 2 பெண்கள் என 3 பேர் உயிரிழந்தனர். 52-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று உயர்நிலை ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் முகாமிட்டுள்ள அவர், காணொலி வாயிலாக டெல்லியில் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். உள்துறை மூத்தஅதிகாரிகள், உளவுத் துறை அதிகாரிகள், பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில்கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டி ருப்பது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, குண்டுவெடிப்பு தொடர்பான முழுவிவரங்களைக் கேட்டறிந்தார். தற்போது களமசேரி குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்படும் என்று தெரிகிறது.
டெல்லி, மும்பையில் உஷார்.. களமசேரி ஜெபக்கூட்ட குண்டுவெடிப்பால் நாட்டின் அனைத்து மாநிலங்களின் போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். குறிப்பாக நாட்டின் தலைநகர் டெல்லி, வர்த்தக தலைநகர் மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து டெல்லி, மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காலம் என்பதால் பொது இடங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கேரள குண்டுவெடிப்பால் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலமடங்கை அதிகரித்துள்ளோம்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே போர் நடைபெற்று கொண்டிருப்பதால் மும்பையில் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. உளவுத் துறையினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு டெல்லி, மும்பை போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
‘ஜெபித்தபோது வெடித்தன': களமசேரி குண்டுவெடிப்பு குறித்து நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதாவது: காலை 9.30 மணிக்கு ஜெபக்கூட்டம் தொடங்கியது. நாங்கள் கண்களை மூடி ஜெபிக்க தொடங்கினோம். சில நிமிடங்களில் பயங்கர சப்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது. அதிர்ச்சியில் கண்களை திறந்தபோது ஜெபக்கூட்டத்தின் மத்திய பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் வலது, இடதுபுறத்தில் மேலும் 2 குண்டுகள் வெடித்தன. என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. அனைவரும் வெளியே செல்ல முயற்சி செய்தோம். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். ஜெபக்கூட்டம் நடைபெற்ற மையம் போர்க்களமாக காட்சியளித்தது.
போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எங்களது உடைமைகளை எடுத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை. அவர்கள் ஏற்பாடு செய்த பேருந்துகளில் வீடுகளுக்கு திரும்பினோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது: கேரள முதல்வர் பினராயி கருத்து - கேரளாவின் களமசேரி குண்டுவெடிப்பு துரதிருஷ்டவசமானது என்று அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்துள்ளது. இதன்காரணமாக காசாவில் வசிக்கும் சுமார் 23 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழலில் இஸ்ரேல் ராணுவ தாக்குதலை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் தலைநகர் டெல்லியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றார். களமசேரி குண்டுவெடிப்பு குறித்து அவர் கூறும்போது, “இது துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த குண்டுவெடிப்பை மிக தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். மாநில டிஜிபி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்? கடந்த 1876-ம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த ரசல் என்பவர் யெகோவாவின் சாட்சிகள் என்ற மத அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. கடந்த 1912-ம் ஆண்டில் அமைப்பின் தலைவர் ரசல் கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு வருகை தந்தார். இதன்பிறகு கடந்த 1950-களில் யெகோவாவின் சாட்சிகள்சபை கேரளாவில் வளர்ச்சி அடைந்தது. தற்போது கேரளா முழுவதும் இந்த சபையில் 15,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் யெகோவாவின் சாட்சிகள் சபை சார்பில் ஆண்டுக்கு 3 முறைமிகப்பெரிய ஜெபக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே தற்போது கொச்சிஅருகேயுள்ள களமசேரியில் 3 நாட்கள் ஜெபக்கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த சபையை சேர்ந்தவர்கள் யூதர்களின் கடவுளான யெகோவாவை முன்னிறுத்துகின்றனர். கிறிஸ்தவர்களின் வழிபாட்டு நடைமுறைகளில் இருந்து இவர்கள் முழுமையாக வேறுபடுகின்றனர். இந்த சபையை சேர்ந்தவர்கள் ராணுவம், காவல் துறையில் சேருவது கிடையாது. தேசிய கீதத்தை பாடுவது கிடையாது.
கடந்த 1985-ம் ஆண்டில் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள உள்ளியில் யெகோவாவின் சாட்சிகள் சபையை சேர்ந்த பினுமோல், பிந்து, இமானுவேல் ஆகிய மாணவ, மாணவியர் தேசிய கீதத்தை பாட மறுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பள்ளியில்தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது 3 பேரும் பணிவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தி உள்ளனர். அவர்களது மதவழக்கத்தின்படி தேசிய கீதத்தை பாடாமல் இருந்துள்ளனர். அமெரிக்கா, கனடா மற்றும் உலகம் முழுவதும் இந்த மதப்பிரிவினர் இவ்வாறே நடந்து கொள்கின்றனர். எனவே 3 பேரும் தேசிய கீதத்தை அவமதித்ததாக கருத முடியாது. அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ஜெர்மனி முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம்பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நாட்டை சேர்ந்த யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டனர். இதன்காரணமாக அந்த சபையை சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டனர். அதன்பிறகும் அவர்கள் ராணுவத்தில் சேர மறுத்துவிட்டனர். இன்றளவும் ஜெர்மனியில் யெகோவா சாட்சிகள் சபையை சேர்ந்தவர்கள் தனி மதப்பிரிவாக கருதப்படுகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago