“நாளை மறுநாள் ‘மேரா யுவ பாரத்’ தளம் துவங்கப்படும்” - பிரதமர் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசத்தைக் கட்டி எழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாடுதழுவிய அளவில் ‘மேரா யுவ பாரத்’தளம் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31ம் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டுமக்களிடம் உரையாற்றும் தனது மாதாந்திர மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். அதன் 106வது நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, "‘மேரா யுவ பாரத்’தளமும் தொடங்கப்பட உள்ளது. இளைஞர்கள் MYBharat.Gov.in என்ற முகவரியில் சென்று பதிவு செய்யவேண்டும். நாட்டை கட்டி எழுப்பும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை இந்திய இளைஞர்களுக்கு மை பாரத் தளம் வழங்கும். வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும் இது" என்று தெரிவித்தார்.

உள்ளூருக்கான குரல்: தன்னுடைய பேச்சில் உள்ளூர் மக்களுக்கான குரல் குறித்து மீண்டும் வலியுறுத்தினார். தனது பேச்சில் அவர் கூறுகையில், "எப்போதும் போலவே இந்த முறையும் நமது பண்டிகைகளில் உள்ளூர் மக்களுக்கு குரல் கொடுப்பதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். நமது கனவான தற்சார்பு இந்தியாவை நிறைவேற்ற நாம் ஒன்றுணைந்து பாடுபடவேண்டும். இந்தியா இன்று உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறியிருக்கிறது.

பழங்குடிகள் பெருமை தினம்: நவம்பர் 15ம் தேதி ஒட்டுமொத்த தேசமும் பழங்குடிகள் பெருமை தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த தினம் மகான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளுடன் தொடர்புடையது. பிர்சா முண்டா நமது அனைவரின் இதயங்களிலும் வாழ்கிறார். உண்மையான துணிச்சல் என்றால் என்ன என்பதையும், தான் கொண்ட உறுதியில் ஒருவர் எவ்வாறு உறுதியாக நிற்பது என்பதையும் நாம் பிர்சா முண்டாவின் வாழ்வில் இருந்து கற்றுக்கொள்ளலாம்" என்று பிரதமர் தெரிவித்தார்.

அக்.31-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாள் என்பதனைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அவருக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் மக்கள் சுற்றுலாவுக்கும், ஆன்மீக யாத்திரைக்கும் செல்லும் போதும் உள்ளூர் பொருள்களை வாங்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சமீபத்திய வரலாறு காணாத காதி விற்பனை சாதனையை நினைவுகூர்ந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE