அயோத்தி ராமர் கோயில் திறப்பு தொடர்பான விளம்பர பலகை - ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் மோதல்

By செய்திப்பிரிவு

போபால்: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பது தொடர்பான விளம்பரப் பலகை வைத்தது தொடர்பாக மத்தியபிரதேச மாநில பாஜக, காங்கிரஸ் தலைவர்களிடையே மோதல் வெடித்துள்ளது.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22-ம்தேதி திறக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக விளம்பரப் பதாகைகளை மத்திய பிரதேச மாநில பாஜகவினர் வைத்துள்ளனர்.

வரும் நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் பதாகைகளை வைத்து வாக்குகளை கவரப் பார்க்கிறது பாஜக என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இதனால் காங்கிரஸ், பாஜகதலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ராமர் கோயிலை வெற்றிகரமாக கட்டி வருவதால் காங்கிரஸ் கட்சி கலக்கம் அடைந்துள்ளது என்று பாஜகவினரும், ராமர் மீதுள்ள பக்தியிலிருந்து பாஜக வழி தவறிச் செல்கிறது என்று காங்கிரஸாரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் இந்தூர் பிரிவு நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரில் உஜ்ஜைன் பகுதியில் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறி பாஜக விளம்பரப் பலகைகள் வைத்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதாகக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரச்சாரத்தில் மத சின்னங்களையும் பாஜக விளம்பரப்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

இதையடுத்து ராமர் விரோத செயல்களில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபடுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்: இதுகுறித்து மாநில பாஜகதலைவர் வி.டி. சர்மா கூறும்போது, "ராமர் கோயில் கட்டுவதால்காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அந்த விளம்பரப் பலகைகளை எடுக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளது. நீங்கள் வேண்டுமானால் எத்தனை விளம்பரப் பலகைகளையும் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.

ராமர் அரசியலுக்கு..: இதுகுறித்து மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறும்போது, ‘‘அன்பு,பக்தி, நம்பிக்கை மற்றும் தியாகத்தின் சின்னமாக ராமர் விளங்கி வருகிறார். அப்படியானால் ராமர்எப்படி அரசியலுக்கு உட்பட்டவராக இருக்க முடியும்? பகவான் ஸ்ரீராமரின் கட்சி என்று ஏதாவது இருக்க முடியுமா? பக்தி மார்க்கத்தில் இருந்து விலகி, புத்தி கெட்டுப் போனவர்கள், ராமரின் பாதத்தில் அமர்ந்து ஞானம் பெற வேண்டும். பகவான் ஸ்ரீ ராமர் கட்சி அரசியலுக்கு உட்பட்டவராக இருக்க முடியாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE