சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் நடை அடைப்பு

By என்.மகேஷ்குமார்


திருமலை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 8 மணி நேரம் நடை சாத்தப்பட்டது.

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று அதிகாலை 1.05 முதல் 2.22 வரை நிகழ்ந்தது. இதனையொட்டி, நேற்று சனிக்கிழமை இரவு 7.05 மணிக்கு ஆகம விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 3.15 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டது. 8 மணி நேரம் கோயில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, சர்வ தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சந்திர கிரகணம் காரணமாக இன்று அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெற்றது. நேற்று கோயிலில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோதண்டராமர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், நிவாச மங்காபுரம் உள்ளிட்ட கோயில்களிலும் நேற்றிரவு 7 மணிக்கு நடை சாத்தப்பட்டு, இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

சிறுத்தை, கரடி நடமாட்டம்: அலிபிரி மலைப் பாதையில் லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே கடந்த 24 மற்றும் 27-ம் தேதிகளில் சிறுத்தை மற்றும் கரடி ஒன்று சுற்றித் திரிவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. ஆதலால், பக்தர்கள் அலிபிரி மலைப் பாதையில், லட்சுமி நரசிம்மர் கோயில் அருகே மிகவும் ஜாக்கிரதையாக கும்பல், கும்பலாக நடந்து திருமலைக்கு வருமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருமலையில் சுற்றி திரியும் கொடிய விலங்குகளை பிடிக்க தேவஸ்தான வனத் துறையினர் ஆங்காங்கே கூண்டுகளை அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE