ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது - பிரியங்கா காந்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘கண்ணுக்கு கண் என்பது உலகம் முழுவதையும் பார்வையற்றதாக்கிவிடும்’என்ற மகாத்மா காந்தியின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "காசாவில் போர் நிறுத்தம் தொர்பான வாக்கெடுப்பை நமது நாடு புறக்கணித்திருப்பது எனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்துகிறது. நமது நாடு அகிம்சை மற்றும் உண்மை என்ற கொள்கையின் அடிப்படையில் உருவானது. அந்தக் கொள்கைகளுக்காக தான் விடுதலைப் போராட்ட வீரர்கள் தங்களின் இன்னுயிரைத் தந்தனர். அந்தக் கொள்கைகள் நமது தேசியத்தை வரையறுக்கும் அரசியலைமைப்பின் அடிப்படையை உருவாக்குகின்றன. அவை, சர்வதேச சமூகத்தை வழிநடத்தும் இந்தியாவின் வலிமையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

ஒரு நிலைப்பாடு எடுக்க மறுத்து, மனிதாபிமானத்தை உடைத்து ,லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துப் பொருள்கள், மின்சாரம் போன்றவைகள் மறுக்கப்படுவதையும், ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கொல்லப்படுவதையும் அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பது, இந்தியா ஒரு தேசமாக நிற்பதற்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரேல் - ஹமாஸ் போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில் அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது. தீர்மானத்துக்கு ரஷ்யா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்பட 40 நாடுகள் உத்தரவாதம் அளித்திருந்தன. 'பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் சட்ட, மனிதாபிமான கடமைகளை கடைப்பிடித்தல்' எனத் தீர்மானத்துக்கு தலைப்பிடப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. உடன் ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன், பிரிட்டன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

இந்நிலையில் வாக்கெடுப்பைப் புறக்கணித்தது குறித்து ஐ.நா பொதுச் சபைக்கான இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜனா படேல் "கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளித்தன. அவை கண்டனத்துக்குரியவை. பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அவர்களை உடனடியாக நிபந்தனைகள் ஏதுமின்றி விடுவிக்க வலியுறுத்துகிறோம்

போரில் ஈடுபட்டுள்ள இருதரப்புகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வன்முறையை விடுத்து ஆக்கபூர்வ முன்னெடுப்புகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம். ஐ.நா. பொதுச் சபை பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக அழுத்தமான செய்தியைக் கடத்தும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தார்.

ஜோர்டான் அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஒட்டுமொத்தமாக 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. அமெரிக்கா எதிர்த்து வாக்களித்ததோடு தீர்மானத்தில் ஓரிடத்தில் கூட ஹமாஸ் அமைப்பினரை ஊடுருவல்காரர்கள் என்று சுட்டிக்காட்டாததை வன்மையாகக் கண்டித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்