“சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சி” - மஹுவா மீது பாஜக எம்பி புதிய குற்றச்சாட்டு 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேள்விக்கு பணம் பெற்ற விவகாரத்தில் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிகள் நடப்பதாக மஹுவா மீது நிஷிகாந்த் துபே புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இன்று (சனிக்கிழமை) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "தகவல்களின்படி, தர்ஷன் ஹிராநந்தானியும், மஹுவா மொய்த்ராவும் இன்னும் தொடர்பில் இருக்கின்றனர். சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தும் முயற்சி நடக்கிறது. மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், கேள்விக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவாவை, முன்னாள் எம்பி ராஜா ராம் பாலுவுடன் ஒப்பிட்டுள்ளார். இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்தப் பதிவில்,"கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது, கேள்வி கேட்பதற்கு பணம் வாங்கிய விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜா ராம் பாலுவுக்கும், மஹுவாவுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. ராம் பால் ரிலையன்ஸ் ஊழலுக்கு எதிராகப் பேசினார், நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். மஹுவா அதானிக்கு எதிராக. இதற்காகவா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? ராஜா ராம் பாலுவின் கடிதத்தை வாசியுங்கள் மஹுவாவின் இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள். ராஜா ராம் இந்தி பேசுபவர். அவர் ஏழை. ஆனால் மஹுவா ஆங்கிலம் பேசுகிறார் அவர் பணக்கார்களுடன் நட்பு வைத்துள்ளார். நேர்மையானவரா அவர்" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஓர் இணைப்பைப் பகிர்ந்துள்ளார்.

சம்மனும், அவகாசமும்: அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு மக்களவை நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், நேரில் ஆஜராக மஹுவா மொய்த்ரா கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் தர்ஷன் ஹிராநந்தானியை குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும். இதற்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு அனுமதி தரவேண்டும். அவர் ஆஜராகும் போது, எனக்கு அளித்ததாகக் கூறப்படும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பட்டியலையும் தர வேண்டும். அதுமட்டுமல்லாமல், குழு தனது இறுதி அறிக்கையைத் தயார் செய்யும் முன்பு ஹிராநந்தானி ஆஜராகி விளக்கம் தர வேண்டும். இதற்கு குழு தனது அனுமதியைத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சர்ச்சையின் பின்னணி: மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்பியாக மஹுவா மொய்த்ரா உள்ளார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் இந்த ரகசியத்தை அண்மையில் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார்அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதன்படி பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் வியாழக்கிழமை காலை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். குழுவின் தலைவர் வினோத் கே சோங்கர் இருவரிடமும் விசாரணை நடத்தி, முக்கிய ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE