“நாட்டில் தெருநாய்களை விட அமலாக்கத் துறைதான் அதிகம் அலைகிறது” - அசோக் கெலாட் சாடல்

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: “நாட்டில் தெருநாய்களை விடவும், அமலாக்கத் துறைதான் அதிகமாக அலைகிறது” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர். மற்றொருபுறம் ராஜஸ்தானில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தினர். 2022-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில், ஜெய்ப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட்,"நாட்டில் தெருநாய்களை விடவும், அமலாக்கத் துறைதான் அதிகமாக அலைகிறது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவற்றின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்கு நான் நேரம் கேட்டிருந்தேன். தற்போது, இந்த ஏஜென்சிகள் அரசியல் கருவிகளாக மாறிக் கிடக்கின்றன. பிரதமர் மோடி தன்னுடைய கவுன்ட்-டவுன் தொடங்கிவிட்டது என்பதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. அவரும் தற்போது எங்களுடைய `கியாரன்ட்டி மாடல்'-ஐ பின்பற்ற தொடங்கியிருக்கிறார்” என்றார்.

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE