சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல் | வெற்றியை நிர்ணயிக்கும் பழங்குடிகளை கவர அரசியல் கட்சிகள் முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பவர்களாக பழங்குடிகள் உள்ளனர். இவர்களைக் கவர்ந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிக்கின்றன.

சத்தீஸ்கரில் மிக அதிக எண்ணிக்கையில் 32 சதவீதமாக இருப்பவர்கள் பழங்குடிகள். இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பழங்குடிகளுக்கான 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இவர்களது ஆதரவு பெற்றவர்களே அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் பழங்குடிகளின் 29 தொகுதிகளில் காங்கிரஸ் 25 தொகுதிகள் பெற்றதால் ஆட்சி அமைக்க முடிந்தது. இது மீண்டும் ஏற்பட்டு தனது ஆட்சி அமையும் எனக் காங்கிரஸ் நம்புகிறது. இதை முறியடிக்க பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தை இந்தமுறை பழங்குடிகள் பகுதிகளில் துவங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா ஆகியோர் பழங்குடிகளுக்காக இரண்டு பரிவர்த்தனை யாத்திரைகள் நடத்தினர். மத்தியப்பிரதேசத்திலிருந்து கடந்த 2000 ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் பிரிந்தபின் 2003 இல் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சி அமைத்த பாஜக, அடுத்தமுறையில் அதை இழந்தது.

சத்தீஸ்கர் பழங்குடிகள் பல காலமாக காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்தனர். பிறகு மீண்டும் 2013 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 18 தொகுதிகள் பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

இதன்பிறகு, பாஜகவின் முதல்வராக தொடர்ந்து மூன்றமுறை வகித்த ரமன்சிங்கை, 2018 இல் அகற்றி காங்கிரஸ் அமர்ந்தது. தற்போது மீண்டும் சத்தீஸ்கரின் பழங்குடிகளை கவர்வதில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பழங்குடிகள் தொகுதிகளில் தனது முன்னாள் எம்எல்ஏக்களை பாஜக போட்டியிட வைக்கிறது. இவர்களில், மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் ஆகியோர் தலா இருவர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் கட்டாய ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் பாஜகவிற்காகப் போட்டியிடுகிறார். பழங்குடிகள் மதம்மாற்றப் பிரச்சனையை முன்னிறுத்தும் பாஜக, இடஒதுக்கீட்டையும் காங்கிரஸ் ரத்து செய்வதாகப் புகார் வைத்துள்ளது. இது குறித்து சத்தீஸ்கர் பாஜக தலைவரும் முன்னாள் மாநில அமைச்சருமான கேதார் காஷ்யாப் கூறும்போது, ‘காங்கிரஸ் ஆட்சியில் மதமாற்றம் அதிகரித்துள்ளது.

அரசுப் பணிகளில் பழங்குடிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை காங்கிரஸ் ரத்து செய்துவிட்டது. எனவே, இந்தமுறை பழங்குடிகள் ஆதரவுடன் பாஜகவே ஆட்சி அமைக்கும்.’ எனத் தெரிவித்தார்.

இப்புகார்களை மறுக்கும் காங்கிரஸின் முதல்வரான பூபேந்தர் பகேல் கூறும்போது, "பழங்குடிகளுக்காக இதுவரை இல்லாதவகையில் எங்கள் ஆட்சி பல திட்டங்களை அமலாக்கி உள்ளது. ராய்பூர் தெற்கு தொகுதியில் நாம் பிரபல கோயிலான துதாரியின் தலைவரான துறவி ராம்சுந்தர் தாஸை போட்டியிட வைத்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால், கடந்த தேர்தலை விட இந்தமுறை அதிக தொகுதிகளுடன் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமையும்" எனத் தெரிவித்தார்.

டெல்லி முதல்வரான அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இந்தமுறை மீண்டும் தீவிரமானப் போட்டியில் இறங்கியுள்ளது. கடந்தமுறை 85 தொகுதிகளில் போட்டியிட்டும் அக்கட்சியால் ஒன்றுகூடப் பெற முடியவில்லை.

இந்ததேர்தலில் இதுவரை 45 வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி மீதம் உள்ள தொகுதிகளுக்கும் அறிவிக்க உள்ளது. தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் கூட்டணியான இண்டியாவின் உறுப்பினராக இருந்தும் ஆம் ஆத்மி, காங்கிரஸின் வாக்குகளை பிரிக்கும் சூழல் நிலவுகிறது.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோராம் மாநிலத்துடன் சேர்ந்து சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 7 மற்றும் 17 என இரண்டு கட்டங்களாக நடைபெறும் 90 தொகுதிகளி தேர்தல் முடிவுகள், இதர நான்குடன் சேர்ந்து டிசம்பர் 3 இல் வெளியாக உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்