“மிகுந்த தொழில்நுட்பத் திறன் நிறைந்த போலீஸ் படை இந்தியாவில் இருக்கும்” - உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த போலீஸ் படையைக் கொண்டிருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடாமியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் (75-வது தொகுதி) தேர்ச்சி பெற்று வெளியேறும் அணிவகுப்புக்கு உள்துறை அமைச்சர் தலைமை தாங்கினார்.

அப்போது அமித் ஷா பேசுகையில், "எதிர்காலத்தில் தொழில்நுட்பம் மிகவும் முக்கியப் பங்கை வகிக்கப்போகிறது. சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றவாளிகளைச் சமாளிக்க உலகிலேயே தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அதிக திறமைவாய்ந்த போலீஸ் படையை நாம் கொண்டிருப்போம். இந்த அதிகாரிகளின் தொழில்நுட்பப் பின்னணி இந்த முன்னெடுப்புக்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது தேர்ச்சி பெற்றிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பின்னணியுடையவர்கள்.

இந்த 75-வது தொகுதி அதிகாரிகள் ஒரு வரலாற்றுத் தருணத்தின் முக்கியமான அங்கமாக இருப்பார்கள். இந்த அதிகாரிகள் தங்களின் கடின உழைப்பு, முயற்சி மற்றும் தியாகத்தால் இந்தப் பணியினை மேலும் சிறப்பானதாக மாற்றுவார்கள். இவர்கள் நமது நாட்டின் மாற்றத்துக்கான சாட்சியாகவும் இருப்பார்கள்.

நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை காக்கும் பொறுப்பும் அகாடமியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் கடமையும் இவர்களுக்கு இருக்கிறது. இந்த அதிகாரிகள் பணிசெய்யும் மாநிலத்தின் உள்ளூர் மொழி, வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அறிந்து கொண்டு அங்கு சிறப்பான காவல் பணியினை வெளிப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.

பாரதிய நியாய சம்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023, பாரதிய சாக்‌ஷிய விதேயக் 2023 ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் விரைவில் நடைமுறைக்கு வந்து விடும். சிறந்த காவல் பணிக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள குற்றவியல் நீதி முறையை நீங்கள் செயல்படுத்த வேண்டும்". இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

34 பெண் அதிகாரிகள் உட்பட இந்த 75 வது பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ள 175 பேரில் 155 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள், 5 பேர் நேபால் போலீஸ் பணி, 6 பேர் ராயல் பூடான் போலீஸ், 5 பேர் மாலத்தீவு போலீஸ் பணி, 4 பேர் மொரீஷியஸ் போலீல் படை என 20 பேர் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பயிற்சியில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு கோப்பை மற்றும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சி.மதன் ஐபிஎஸ் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் சபத்ரா ஐபிஎஸ் ஆகியோர் தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (National Crime Record Bureau) கணினி படிப்புக்கான விருதினை பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE