இமாச்சலில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் காற்று சுரங்கப்பாதை தொடக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் செங்குத்து காற்று சுரங்கப் பாதையை ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே காணொலி மூலம் திறந்து வைத்தார் என பாதுகாப்பு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது: ராணுவ பயிற்சியில் பல்வேறு நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசத்தின் பாக்லோவில் உள்ள சிறப்பு படைப்பயிற்சி மையத்தில் முதன்முறையாக செங்குத்து காற்றுச் சுரங்கப் பாதையை நிறுவப்பட்டுள்ளது.

வான்வழி தாக்குதல் நடடிக்கைகளில் பாராசூட் மூலமாக வீரர்கள் குதித்து தங்களது திறன்களை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்ற பயிற்சியாளர்களின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த காற்று சுரங்கம் உதவியாக இருக்கும்.

வான்வழி இயக்கத்தில் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து வீரர்கள் சுரங்கத்திலிருந்து வெளிப்படும் காற்றின் மூலம்நிஜமான முறையில் பறந்து உணர்வுப்பூர்வமாக அறிந்துகொள்ள முடியும். மேலும், இதன் மூலம் கிடைக்கும் எதிர்வினைகளையும் மதிப்பீடு செய்து அதற்கேற்ற வகையிலான தீர்வுகளையும் நாம் கண்டறிய முடியும்.

தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை சமாளிக்க சிறப்பு படைகளுக்கு தேவையான விரைவான மற்றும் துல்லியமான பயிற்சிகளை அளிப்பதை இந்த காற்று சுரங்கப்பாதை உறுதி செய்யும். இவ்வாறு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE