'கேள்விக்கு லஞ்சம்' குற்றச்சாட்டு: மஹுவாவுக்கு மக்களவை நெறிமுறைகள் குழு சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், வரும் அக்டோபர் 31-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு மக்களவை நெறிமுறைகள் குழு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக, இந்தக் குழுவானது எம்.பி. மஹுவா மீது குற்றஞ்சாட்டிய பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ரி ஆகியோரின் வாக்குமூலங்களை இன்று பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 31-ஆம் தேதி மஹுவா மொய்த்ரா ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பவும் குழு முடிவு செய்துள்ளது என்று குழுத் தலைவர் வினோத் சோன்கர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு பின்னணி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே சில தினங்களுக்கு முன்பு குற்றசாட்டு முன்வைத்தார். மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை என்றும், அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்ப அவர் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றுள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, விளக்கம் அளித்த தர்ஷன் ஹிராநந்தானி, மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா அவரது நாடாளுமன்ற கணக்கையும் அதன் கடவுச் சொல்லையும் தன்னிடம் கொடுத்தார் என்றும், அதன் மூலம் தேவைப்படும்போது மஹுவா சார்பாக தான் கேள்விகளை எழுப்பியதாகவும் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE