ராஜஸ்தான் முதல்வர் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன்; மாநில காங். தலைவர் இடங்களிலும் அதிரடி சோதனை

By செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: அந்நியச் செலாவணி விதிமீறல் வழக்கில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநில தலைவர்கள் தொடர்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத் துறையின் சம்மனுக்கு பிறகு அதுகுறித்து கருத்து தெரிவித்த வைபவ் கெலாட், “இது 12 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு. அதற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள சமயம் மிகவும் முக்கியமானதும், கவனிக்கத்தக்கதுமாகும். என் மூலம் என் தந்தை குறிவைக்கப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

‘அச்சத்தைப் பரப்புகிறார்கள்’ - இந்த சம்மன் விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "அக்டோபர் 25-ம் தேதி காங்ரகிரஸ் வருடத்துக்கு ரூ.10,000, ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர் என பெண்களுக்கான வாக்குறுதிகளை வழங்கியது. அக்டோபர் 26-ம் தேதி, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ராவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி எனது மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது ராஜஸ்தானில் அமலாக்கத் துறைக்கு சிவப்பு ரோஜா வரவேற்பு நிகழ்வு நடக்கிறது என்று நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்கு விளங்கியிருக்கும். ஏனென்றால் பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, ஏழை - எளிய மக்கள் காங்கிரஸ் அரசின் வாக்குறுதி மூலம் பலனடைவதை பாஜக விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அசோக் கெலாட், “மத்திய அமைப்புகள் அதன் மாண்பை தற்போது இழந்துவிட்டன. இது ஓர் அசாதாரணமான சூழ்நிலை. இது என் மகன் பற்றியதோ, மாநில காங்கிரஸ் தலைவர் பற்றியதோ இல்லை. அவர்கள் நாட்டில் அச்சத்தை பரப்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டில் சோதனை: முதல்வரின் மகனுக்கு சம்மன் அனுப்பப்பட்ட அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும், மஹுயா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான கோவிந்த் சிங் தோடஸ்ராவுக்குச் சொந்தமான இடங்களில் தேர்வுத்தாள் வெளியான வழக்கில் பணமோசடி தொடர்பாக விசாரணையை அமலாக்கத் துறையினர் நடத்தினர். முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான தோடஸ்ராவுக்கு தொடர்புடைய சிகார் மற்றும் ஜெய்பூரில் உள்ள இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

வைபவ் கெலாட்டுக்கு எதிரான வழக்கு: கடந்த 2015-ம் ஆண்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த இருவர், வைபவ் கெலாட் மொரீஷியஸைச் சேர்ந்த ஷிவனார் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் மூலம் பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்திருந்தனர். அந்தப் புகாரில், மொரீஷியஸை அடிப்படையாக கொண்ட நிறுவனத்தில் இருந்து மும்பையைச் சேர்ந்த ட்ரைடன் ஹோட்டல்ஸ் என்ற நிறுவனத்தின் 2,500 பங்குகளை வாங்கியதன் மூலம் கடந்த 2011-ம் ஆண்டு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ரூ.100 மதிப்புள்ள பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.39,900-க்கு வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. ஷிவ்னார் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் கடந்த 2006-ம் ஆண்டு கறுப்பு பணத்தை மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ஷிவ்னார் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து ட்ரைடன் ஹோட்டல்ஸ் அந்நியச்செலாவணி மேலாண்மை சட்டவிதிகளுக்கு புறம்பாக மிகப் பெரிய அளவிலான ப்ரீமியம் தொகையை நேரடி வெளிநாட்டு நிதியாக பெற்றுள்ளது என்று தெரிவித்தனர். மேலும், ட்ரைடன் குழுமம் எல்லை தாண்டிய அளவில் ஹவாலா பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும், இந்த நிறுவனத்தின் நிறுவனராக அறியப்படும் ரதன் கன்ட் ஷர்மா, வைபவ் கெலாடின் வாடகைக் கார் நிறுவனத்தின் தொழில் பங்குதாராவார் என்றும் அவர்கள் கூறினர்.

கார்கே கண்டனம்: ராஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத் துறைச் சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘பிரதமர் மோடி தேர்தலில் மோதுவதற்கு விசாரணை அமைப்புகளின் உதவியை நாடுகிறார்’ என்று குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், "ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்படப் போகும் உறுதியான தோல்வியைப் பார்த்து பாரதிய ஜனதா கட்சி தனது கடைசி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ராஸ்தானிலும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மோடி அரசின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு எதிரானது. விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். இதற்காக மக்கள் பாஜகவுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள்" என்று கார்கே தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE