ம.பி.யில் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.47 லட்சம் பழைய நோட்டுகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் துப்புரவு தொழிலாளி ஒருவரிடம் இருந்து பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த பழைய நோட்டுகளின் மதிப்பு ரூ.47 லட்சம் எனத் தெரியவந்துள்ளது.

ம.பி.யில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க அதிகாரிகள் சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ளர்.

இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் குவாலியர் நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவரிடம் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெருமளவில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பழைய ரூ.1,000 நோட்டுகள் 41 கட்டுகளும் பழைய ரூ.500 நோட்டுகள் 12 கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.47 லட்சம் ஆகும்.

அந்த நபர் மொரேனா மாவட்டத்தை சேர்ந்த துப்புரவு தொழிலாளி சுல்தான் கரோசியா என அடையாளம் காணப்பட்டார். பணமதிப்பு நீக்க நடைமுறைக்கு 6-7 மாதங்களுக்கு முன்பு ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து இந்தப் பணத்தை எடுத்ததாகவும் பிறகு அதனை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும் தசரா பண்டிகை நாளில் மந்திரவாதி ஒருவர் இந்தப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவார் என தனக்கு தெரியவந்ததால் அந்த மந்திரவாதியை பார்க்கச் செல்வதாக சுல்தான் கரோசியா கூறினார்.

இதையடுத்து சுல்தான் கரோசியா, அவரது கூட்டாளி ஜிதேந்திர பதவுரியா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு போலீஸார் தகவல் அளித்துள்ளனர். மந்திரவாதியை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE