750 கிலோ தங்க அம்பாரியை சுமந்து மைசூருவில் தசரா யானை ஊர்வலம் கோலாகலம்

By இரா.வினோத்


பெங்களூரு: உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் இறுதி நாளான நேற்று யானை ஊர்வலத்தின்போது 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை அபிமன்யூ யானை சுமந்து சென்றது.

கி.பி. 1610-ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்வடி கிருஷ்ணராஜ உடையார் மன்னர் விஜயதசமியை முன்னிட்டு தசரா விழாவை கொண்டாட தொடங்கினார். 10 நாட்கள் வண்ண மயமாக நடைபெறும் இவ்விழாவை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வருவதால் மைசூரு தசரா உலகப் புகழ் ‍பெற்றது.

414-வது ஆண்டாக இந்த ஆண்டில் கடந்த 15-ம் தேதி இசையமைப்பாளர் ஹம்சலேகா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜை செய்து தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை, ரயில் நிலையம்,பழங்கால கட்டிடங்கள், பிருந்தாவன தோட்டம், கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளிட்டவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதால் மைசூரு விழாக்கோலம் பூண்ட‌து.

இதைத் தொடர்ந்து 10‍ நாட்களும் இளைஞர் தசரா, விவசாயிகள் தசரா, உணவு தசரா, மகளிர் தசரா, விளையாட்டு தசரா, திரைப்பட தசரா, விமான கண்காட்சி, மல்யுத்த போட்டி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், மலர் கண்காட்சியும் ந‌டைபெற்றது. மன்னர் யதுவீர், அரண்மனையில் தங்கத்தினால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தினார்.

தசரா விழாவின் இறுதி நாளான நேற்று மன்னர் யதுவீர் அரண்மனை வளாகத்தில் உள்ள பன்னி மரத்துக்கு பூஜை செய்தார். பிற்பகல் 5 மணியளவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஜம்பு சவாரி என அழைக்கப்படும் யானைகள் சவாரி தசரா ஊர்வலத்தை சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அபிமன்யூ யானை சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்றது. சைத்ரா, லட்சுமி உள்ளிட்ட யானைகளும், குதிரை படை, ஒட்டக படைஆகியவையும் அதனை பின்தொடர்ந்து ஊர்வலமாக சென்றன. பன்னி மண்டபத்தை நோக்கி 5 கிமீதூரம் சென்ற இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும் கலைகலாச்சார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புற கலைக்குழுவினர் உள்ளிட்ட 55 குழுவினர் பின்தொடர்ந்து சென்றனர். சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் ஊர்தியும், மத்திய,மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான‌ ஊர்திகளும் இதில்இடம் பெற்றிருந்தன.

இந்த கண்கொள்ளா காட்சியை அரண்மனை வளாகத் தில் இருந்து மட்டும் 30 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இதுதவிர பன்னி மண்டபம் வரை மைசூருவின் பிரதான சாலைகளிலும், வீதிகளிலும் குவிந்து லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE