‘மகள்களை வணங்குவது நாடகமா? ’ - திக்விஜய் சிங் கிண்டலுக்கு சிவராஜ் சிங் சவுகான் கேள்வி

By செய்திப்பிரிவு

போபால்: மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது கன்னியா பூஜை குறித்து கிண்டல் செய்த முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்-க்கு ‘மகள்களை வணங்குவது நாடகமா’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், "ஒட்டு மொத்த தேசமே நேற்று (திங்கள் கிழமை) கன்னியா பூஜை செய்தது. காங்கிரஸின் திக்விஜய் சிங்கோ அதனை கேலியான நாடகம் என்று சொன்னார். அவர்களைப் போன்றவர்களால் பெண்களுக்கு மரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மகள்களை வணங்குவது நாடகமா என்று மல்லிகார்ஜுன கார்கேவிடமும், சோனியா காந்தியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். இதனை காங்கிரஸ் விளக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக போபாலில் உள்ள முதல்வரின் வீட்டில் வைத்து நடந்த கன்னியா பூஜையில் 300க்கும் சிறுமிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்தச் சிறுமிகள் இன்று தங்களின் மாமா வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் வெறும் மகள்கள் மட்டுமல்லர், அவர்கள் ஒவ்வொருவரிலும் நான் கடவுளைப் பார்க்கிறேன். கடவுளாக நினைத்து அவர்களின் பாதங்களை கழுவினேன். இதன்மூலம் மகள்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியைச் சொல்ல விரும்பினேன்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, நவராத்திரியின் 9-வது நாளில் செய்யப்படும் கன்னியா பூஜை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் கேலி செய்துள்ளார். அவர் கூறுகையில், "நான் முதல்வரைப் பற்றி பேசவில்லை. இப்படி ஒரு பொய்யான முதல்வரை நான் பார்த்ததே இல்லை. இப்படி நாடகத்தில் ஈடுபடும் முதல்வரையும் நான் பார்க்கவில்லை. இப்போது பிரதமர் மோடி கூட இவரைப் பார்த்து பயப்படுகிறார்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சார்திய நவராத்திரியின் 9 ஆவது நாள் தேவி துர்காவையும் அவரின் 9 அவதாரங்களையும் வணங்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்துகள் ஆண்டுதோறும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றது. சாரத் நவராத்திரியின் 10 நாள் தசரா அல்லது விஜயதசமி என்று கொண்டாடப்படுகின்றது.

இதனிடையே மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்துவருகிறது. மாநிலத்துக்கு அடுத்த மாதம் 17-ம் தேதி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிகை டிச.3 ம் தேதி நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE