மோடி அரசின் கீழ் வருமான சமத்துவமின்மை அதிகரித்துவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மோடி அரசின் கீழ் பெரும் பணக்கார்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இடையேயான வருமான இடைவெளி மிகவும் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த 2013 - 14 ஆண்டு முதல் 2021 - 2022 ஆண்டு வரையிலான பொதுவில் கிடைக்கும் வருமான வரிக்கணக்கு தகவல்கள், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையின் முக்கியமான கருப்பொருளான வருமான சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை உறுதி செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடி அரசின் கீழ், பெரும் பணக்கார்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கான ஆதாரம் இதோ: 2013- 14- ம் ஆண்டில் வருமான வரி செலுத்தியவர்களில் டாப் 1 சதவீதத்தினர் 17 சதவீதம் மொத்த வருமானம் ஈட்டியுள்ளனர். 2021 - 22 - ம் ஆண்டில் வருமான வரி செலுத்தியோரில் முதல் 1 சதவீதத்தினரின் மொத்த வருமானம் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும், நடுத்தர வர்க்கத்தினரை விட பெரும் பணக்கார்களின் வருமானம் வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த 2013 - 14 ஆண்டு முதல் 2021 - 22 ஆண்டு வரை வருமான வரி செலுத்தியோரில் முதல் 1 சதவீதத்தினரின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 13 சதவீதம் உயர்ந்துள்ளது. இது வரி செலுத்துவோரின் கடைசி 25 சதவீதத்தினரின் வருமானத்தை விட 60 சதவீதம் அதிகமானது.

உண்மையில், பணவீக்கத்தை சரிசெய்த பின்னர், வரிசெலுத்துவோரில் கீழே இருக்கும் 25 சதவீதத்தினரின் மொத்த வருமானம் 2019ம் ஆண்டை விட 2022-ல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் மொத்த வருமானம் 11 சதவீதம் குறைந்துள்ளது. 2019 நிதியாண்டில் ரூ.3.8 கோடியாக இருந்த வருமானம் 2022-ம் ஆண்டு ரூ.3.4 கோடியாக குறைந்துள்ளது.

இதற்கிடையில், வருமான வரிசெலுத்துவோரில் முதல் 1 சதவீதத்தினரின் உண்மையான வருமானம் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019 நிதியாண்டில் ரூ.7.9 கோடியாக இருந்த வருமானம், 2022 நிதியாண்டில் ரூ.10.2 கோடியாக உயர்ந்துள்ளது. புள்ளி விபரங்கள் பொய் சொல்லாது; பிரதமர் மட்டுமே அதனை செய்வார்" என்று கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பெரும் பணக்கார்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இடையிலான வருமான வேறுபாடு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE