ஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆளில்லா விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, மீண்டும் பத்திரமாக கடலில் இறக்கப்பட்டது
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டில் 3 விண்வெளி வீரர்கள் விண்கலம் மூலம் தரையில் இருந்து 400 கி.மீ தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பப்பட உள்ளனர். அங்கிருந்தபடியே 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மீண்டும் அவர்கள் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கிடையே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் அழைத்து வருவது சவாலான பணியாகும். இதில் விண்கலத்தை எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக பல்வேறுகட்ட பரிசோதனைகள் நடத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டது.
ஏற்கெனவே விண்கலம் கீழிறங்கும்போது பாராசூட்கள் விரிதல் போன்ற சிறிய அளவிலான சோதனைகள் இஸ்ரோவால் நடத்தப்பட்டது. தொடர்ந்து மனிதர்களை சுமந்து செல்லும் ஆளில்லாத விண்கலத்தை 4 முறை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டுவரும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முதல்கட்டமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா மாதிரி விண்கலம் விண்ணில் நேற்று செலுத்தப்பட்டது. தரையில் இருந்து 11.6 கி.மீ உயரம் சென்றதும் ராக்கெட்டில் இருந்து விண்கலம் தனியாக விடுவிக்கப்பட்டது. அதன்பின் 16.7 கி.மீ உயரம் எட்டியதும் விண்கலம் தரையிறங்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கின. அப்போது மணிக்கு 1,470 கி.மீவேகத்தில் விண்கலம் பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கலத்தில் உள்ள 10 பாராசூட்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் பிரிந்து அதன் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இறுதியாக ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் விநாடிக்கு 8 மீட்டர் வேகத்தில் விண்கலம் வெற்றிகரமாக இறக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக சுமார் 10 நிமிடங்களில் இந்த பணிகள் முடிந்துவிட்டன.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப உள்ள திட்டத்தின் ஏதேனும் ஒரு சூழலில் விண்கலம் கட்டுப்பாட்டை இழந்தால் அதிலுள்ள வீரர்களை பாதுகாப்பாக மீட்க ஏதுவாக இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறும்போது, ‘‘விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும்போது எதிர்பாராத ஆபத்துகள் நேரலாம். அப்போது விண்கலத்தை பாதுகாப்பாக கடற்பரப்பில் விழச் செய்வதே இந்த சோதனைகளின் நோக்கமாகும். அதில் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட விண்கலத்தை ஆய்வு செய்து அதிலுள்ள பாராசூட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப அம்சங்களின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் பலவிதமான சோதனைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் அவசர கால பாதுகாப்பு வசதிகள், விண்வெளியின் புறச்சூழல் பாதிப்பு மற்றும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்படும்’’ என்றனர்.
பிரதமர் வாழ்த்து: ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘இந்தியாவின் ககன்யான் திட்டத்தை நனவாக்க இந்த சோதனை திட்டத்தின் வெற்றியானது நம்மை ஒரு படி முன்னோக்கி நகர்த்திச் செல்கிறது. இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ககன்யான் விண்கலத்தின் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பயணத்தில் இந்தச் சாதனை குறிப்பிடத்தக்க மைல் கல்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago