ராஜஸ்தான் தேர்தல் | பாஜகவின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: வசுந்தரா ராஜே போட்டி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: ராஜஸ்தான் தேர்தலில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மீண்டும் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தானில் பாஜக சார்பில் 2 முறை முதல்வராக பதவி வகித்தவர் வசுந்தரா ராஜே. அம்மாநில மக்களால் ‘மகாராணி’ என்று அழைக்கப்படும் அவர், அப்பகுதியின் ராஜ பரம்பரையான சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்தவர். ராஜஸ்தானின் ஜோத்பூர் ராஜ குடும்பத்தின் மருமகளாக வந்தவசுந்தரா, அதன் மகாராணியாகவும் உள்ளார். கட்சியின் சக போட்டியாளர்களால் வசுந்தராவைபாஜக தலைமை புறக்கணிப்பதாக புகார் உள்ளது. இதன் காரணமாக அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கி ராஜஸ்தானிலிருந்து வெளியேற்றும் முயற்சியும் நடைபெற்றது. இதற்கு வசுந்தராவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், உட்கட்சி பூசலை தவிர்க்க ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வசுந்தராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜலாவர் மாவட்டம்ஜல்ராபத்தான் தொகுதி அவருக்குஒதுக்கப்பட்டுள்ளது. வசுந்தராவின் ஆதரவாளர்கள் 7 பேருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

வசுந்தரா, ஜல்ராபத்தான் தொகுதியில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனால் கட்சித் தலைமை தன்னை புறக்கணித்தாலும், வசுந்தரா கவலைப்படாமல் தன்னைத் தானே முன்னிறுத்திக் கொண்டு வருகிறார்.

ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், வசுந்தரா உள்ளிட்ட எவரையும் முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவில்லை. ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்கும் கூட்டங்களிலும் வசுந்தரா புறக்கணிக்கப்படுகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய பிரதமர் மோடி, வசுந்தரா பெயரைக் குறிப்பிடவில்லை. இக்கூட்டத்தில் அவர் பிரதமருக்கு பின்வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வசுந்தரா, மேடைப்பேச்சின் படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இதன்மூலம் அவர் தன்னைத் தானே முன்னிறுத்திக் கொள்வதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அதற்கு முக்கியப் போட்டியாளராக பாஜக உள்ளது.

இத்துடன், ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வரும் தலித் சமூகத்தின் தலைவருமான பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இங்கு போட்டியில் உள்ளார். உ.பி.யின் சமாஜ்வாதி உள்ளிட்ட வேறுசில சிறிய கட்சிகளும் ஆங்காங்கே சில தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. ராஜஸ்தானில் வரும் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், ம.பி., சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில பேரவைத் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 3-ல் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE