தெலங்கானா தேர்தல் | பிஆர்எஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெறும் - கேசிஆர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் பிஆர்எஸ் கட்சி 95 முதல் 105 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான கே. சந்திரசேகரராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கே.சந்திரசேகர ராவ் வெள்ளிக்கிழமை, அவரது தொகுதியான கஜ்வெல்லில் நடந்த தொகுதி அளவிலான பிஆர்எஸ் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கடந்த 2016-ம் ஆண்டின் பணமதிப்பிழப்பு, 2020-ம் ஆண்டின் கரோனா பெருந்தொற்று போன்ற காரணங்களால் தெலங்கானாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, சில வளர்ச்சித் திட்டங்கள் மந்தநிலையை எட்டின. நாட்டின் மிகவும் இளைய மாநிலமான தெலுங்கானா பல கஷ்டங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. மாநிலம் அதன் முக்கியமான வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதனால் மக்கள் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தற்போதைய வளர்ச்சி மற்றும் சாதனைகளில் நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. சிறந்து விளங்க உழைத்துக் கொண்டே இருப்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு. மக்களுக்கு நாம் சிறந்த வாழ்க்கை முறையை வழங்க வேண்டும். தொடர்ந்து இரண்டு முறை என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ததற்கு கஜ்வெல் மக்களை நான் வணங்குகிறேன். இந்தச் சட்டமன்றத் தொகுதி வளர்ச்சியடைந்துள்ளது. தொகுதியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுவேன். நாட்டில் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆனால் தெலங்கானாவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதற்கு காரணம், காலேஸ்வரம் திட்டம், கொண்டபோச்சம்மா மற்றும் மல்லண்ணா சாகர் அணை கட்டுமானங்கள் பெரிதும் உதவியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன" இவ்வாறு அவர் பேசினார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் முனைப்பில் இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE