உ.பி. கிராமங்களில் ‘டிஜிட்டல் டாக்டர் கிளினிக்’: தனியார் மருத்துவமனை உதவியுடன் முதல்வர் யோகி அரசு திட்டம்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரபிரதேச கிராமப்புறங்களில் ‘டிஜிட்டல் டாக்டர் கிளினிக்’ என்ற பெயரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இவற்றை தனியார் மருத்துவமனை உதவியுடன் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா பரவல் காலங்களில் பொதுமக்களுக்கு நாடு முழுவதிலும் தொலைநிலை மருத்துவ ஆலோசனைகள் கிடைத்தன. இதன் பலனை பலரும் பெற்றதுடன், கரோனா பரவலையும் சமாளித்தனர். இந்த வெற்றியின் அடிப்படையில் உ.பி.யின் கிராமப்புறங்களில் ‘டிஜிட்டல் டாக்டர் கிளினிக்’ எனும் பெயரில் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக லக்னோ, புலந்த்ஷெஹர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 20 கிராமங்களில் இவை தொடங்கப்படுகின்றன.

1000 கோடி மதிப்பில்.. இதற்காக, உ.பி. அரசு பிரபல ஒபுது குழும மருத்துவமனைகளுடன் ரூ.1,000 கோடிமதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தமையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இணையவழியில் பிரச்சினைகளை கேட்டு ஆலோசனை வழங்குவார்கள். இதற்காக ஒவ்வொரு மையத்திலும் தகுதிவாய்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவர் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பார். இந்த மருத்துவ ஆலோசனைக்கு ரூ.30 அல்லது ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது. மேலும் இங்கு குறைந்த விலையில் மருந்துகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

குறைந்த கட்டணத்தில் மருத்துவ ஆய்வக வசதியும் இந்த மையங்களில் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட சில மையங்களில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை வசதியும் செய்யப்பட உள்ளது. இதற்கு ரூ.200 அல்லது 300 என குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

தற்போது தொடங்கப்படும் 20 மையங்களின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை சரிசெய்து, உ.பி.யின் 75 மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்களிலும் இந்த மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த மையங்களில் மேலும் பல வசதிகளை ஏற்படுத் தவும் முதல்வர் யோகி அரசு திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் தெருமுனை கிளினிக்குகளை ஆம் ஆத்மி அரசு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதுபோல் உ.பி. அரசின் தொலைநிலை மருத்துவ ஆலோசனை மையங்களும் பொதுமக்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE