கழிவுநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தும்போது உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கழிவுநீர் தொட்டிகளை சுத்தப் படுத்தும்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மனித கழிவுகளை கைகளால் அள்ளுவதற்கு தடை விதித்து கடந்த 1993-ம் ஆண்டில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆனால்இது முறையாக அமல் செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த2014-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். தூய்மைப் பணியாளர்உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இந்த தீர்ப்பு முறையாக அமல் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி பல்ராம் சிங் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ரவீந்திர பட், அரவிந்த் குமார் அமர்வுவிசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நிரந்தர ஊனம் ஏற்படும் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு குறையாமல் இழப்பீடு வழங்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர் மறுவாழ்வுச் சட்டம் 2013 முழுமையாக அமல் செய்ய வேண்டும். தூய்மைப்பணியாளர்களுக்கு தொழில் திறன் பயிற்சி வழங்கி அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

14 அறிவுரைகள்: தூய்மைப் பணியாளர்களின் நிலை குறித்து மாநில உயர் நீதிமன்றங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவை உட்படஉச்ச நீதிமன்றத்தின் 14 அறிவுரைகளை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த மார்ச்மாதம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், 1993-ம் ஆண்டு முதல் இதுவரை பணியின்போது 1,035 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE