‘இண்டியா’ கூட்டணியில் சிக்கல் ஆரம்பம்: ம.பி.யில் சமாஜ்வாதி போட்டியிட காங். எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதில் இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால், அந்த கூட்டணியில் பிரச்சினை ஆரம்பமாகியுள்ளது.

தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாக அந்த கூட்டணியில் எந்த திட்டமும் இல்லாதது போல் தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில் போட்டியிடுவதில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகிக் கொள்ள வேண்டும்என உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறியுள்ளார். மேலும், உ.பி.யின் கோசிசட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தால், அங்குசமாஜ்வாதி தோல்வியடைந்திருக் கும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு கடுங் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூரில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதுபோன்ற கருத்துகளை தெரிவிக்க கட்சியின் மாநில தலைவருக்கு அதிகாரம் இல்லை. பாட்னா, மும்பை ஆகிய இடங் களில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் அஜய் ராய் கலந்து கொள்ளவில்லை. இண்டியா கூட்டணி பற்றி அவருக்கு என்ன தெரியும்? காங்கிரஸில் அஜய் ராய் போன்ற சிலர் பாஜகவுடன் இணைந்து சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். தனது கட்சி பற்றி கருத்து தெரிவிக்க, இது போன்ற சிறிய தலைவர்களை காங்கிரஸ் தலைமை அனுமதிக்கக் கூடாது. காங்கிரஸ் எங்களை ஏமாற்றும் என தெரிந்திருந்தால், நான் அவர்களை நம்பியிருக்க மாட்டேன். சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கிடையாது என முதல்நாளே தெரிந்திருந்தால், இண்டியா கூட்டணி கூட்டங்களுக்கு நாங்கள் சென்றிருக்க மாட்டோம்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவின் இந்த கருத்து, இண்டியா கூட்டணிக்குள் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், கோண்ட்வானா கட்சியுடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி கட்சி பிஜாவர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. 5 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து மொத்தம் 1.3 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE