நாடாளுமன்றத்தில் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க திரிணமூல் எம்.பி.க்கு லஞ்சம் கொடுத்தேன்: தொழிலதிபர் ஒப்புதல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்தேன் என்று தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கும் அவர் புகார் கடிதம் அனுப்பினார்.

அதில் அவர், ‘‘மக்களவையில் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா இதுவரை கேட்டுள்ள 61 கேள்விகளில், 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. அதானி குழுமத்தை குறிவைத்து கேள்வி எழுப்புவதற்காக, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் அவர் லஞ்சம் பெற்றுள்ளார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக, நாடாளுமன்ற நெறிமுறை குழுவுக்கு வாக்குமூல கடிதத்தையும் அவர் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் பிரபலமடைய விரும்பினார் மஹுவா மொய்த்ரா. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் எளிதாக பிரபலம் அடையலாம் என்று அவருக்கு சிலர் ஆலோசனை கூறியதால், மோடியை குறிவைத்து அதானியை விமர்சிக்க ஆரம்பித்தார். அவருக்கு தேவையான தகவலை நான் வழங்கினேன்.

ஒரு கட்டத்தில் அவர் தனது நாடாளுமன்ற இணையதள கணக்கின் முகவரியையும், அதன் கடவுச்சொல்லையும் என்னிடம் பகிர்ந்தார். இதை பயன்படுத்தி, அதானிக்கு எதிரான கேள்விகளை இணையதளம் மூலமாக நாடாளுமன்றத்தில் அவ்வப்போது முன்வைத்தேன். இதை பயன்படுத்தி அவர் என்னிடம் விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு என பல்வேறு சலுகைகளை கேட்டார்.

பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கு வேறு சிலரும் அவருக்கு உதவினர். நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடனும் அவர் தொடர்பில் இருந்தார். அவர் மூலமாக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் என் தொழிலுக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

இவ்வாறு அதில் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா, ‘‘பிரதமர் அலுவலகத்தால் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கையெழுத்திடுமாறு தர்ஷன் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவரது தொழிலை முடக்கிவிடுவதாக மிரட்டியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE