“என்னைக் காரணம் காட்டி வசுந்தராவை தண்டிக்காதீர்” - பாஜகவுக்கு அசோக் கெலாட் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “என்னைக் காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் வசுந்தரா ராஜேவை தண்டிக்க வேண்டாம்” என்று பாஜகவை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு அவர் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க நடந்த சதியில் தனது அரசைக் காப்பாற்றிய வசுந்தராவின் செயலை நினைவுகூர்ந்துள்ளார்.

கடந்த மே மாதம் ராஜஸ்தான் முதல்வர் கெலாட் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில், கடந்த 2020-ம் ஆண்டு தனது அரசை கவிழ்க்க சதி நடந்ததாகவும், அதன் பின்னணியில் அமித் ஷா இருந்ததாகவும், எனினும் எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா தனது அரசை அந்த சதியில் இருந்து காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார். இதனை அப்போதே வசுந்தரா ராஜே சிந்தியா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை செய்தியாளார்களிடம் பேசியபோது பாஜகவில் வசுந்திரா ஓரம்கட்டப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அசோக் கெலாட்,"அது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், என்னைக் காரணம் காட்டி அவருக்கு தண்டனை வழங்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அது அவருக்கு செய்யும் அநீதியாகும்.

எனது தலைமையிலான அரசு நெருக்கடியைச் சந்தித்தபோது நான் ஒரு விஷயத்தை எடுத்துக் கூற விரும்பினேன். நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அப்போது மாநில முதல்வராக இருந்த பைரோன் சிங் செகாவத் அறுவைசிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தார். இங்கு அவரது கட்சியினர் அவரது அரசை கவிழ்க்க முயன்றனர். மாநில காங்கிரஸ் தலைவராக இது சரியில்லை என்று நான் அதற்கு எதிப்பு தெரிவித்தேன். இதனை நான் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் ஆளுநர் பாலி ராம் பகத்திடமும் தெரிவித்தேன். இதுகுறித்து கைலாஷ் மேக்வாலுக்கு தெரியும்.

எனது அரசு நெருக்கடியில் இருந்தபோது, அதுபோல அரசைக் கவிழ்க்கும் மரபு இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார். நான், வசுந்தரா ராஜேவுடன் இணைந்த எம்எல்ஏக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அப்போது கைலாஷ் மேக்வால் போலவே வசுந்தராவும் அதே முடிவினைக் கொண்டிருந்தார் என்று நான் அறிந்துகொண்டேன். ஆனால் பொதுக்கூட்டம் ஒன்றில் என் வாயிலிருந்து வெளியே வந்துவிட்டது" என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.

அடுத்த மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸும், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜகவும் கடும் முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜகவில் முன்னாள் முதல்வர் வசுந்திராவின் முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் முதல்வர் அசோக் கெலாட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE