“முதல்வர் பதவியை விட்டுவிட விரும்புகிறேன். ஆனால்...” - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பகிர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முதல்வர் பதவியை விட்டுவிட தான் விரும்புவதாகவும், ஆனால் அந்தப் பதவி தன்னை விட மறுப்பதாகவும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

200 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் நவம்பர் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை அடுத்து அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகும்கூட விசாரணை அமைப்புகள் விசாரணையை தொடர்ந்து நடத்துகின்றன. ஜனநாயக நாட்டில் இது சரியான அணுகுமுறை அல்ல. இந்த மூன்று அமைப்புகள் மீதும் நாட்டு மக்களுக்கு நல்ல மதிப்பு உள்ளது. ஆனால், அவற்றின் செயல்பாடுகள் நம்பகத்தன்மையை குறைப்பதாக உள்ளது.

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ உயரதிகாரிகள் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு பதவி ஏற்கிறார்கள். எனவே, அவர்களின் பணி மிகவும் நியாயமானதாக இருக்க வேண்டும். மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அங்கு செல்ல பிரதமர் மோடிக்கு நேரம் இல்லை. மத்திய விசாரணை அமைப்புகளைக் கொண்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சோதனை நடத்துவதில் அவர் மும்முரமாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வர் அஜித் பவார் மீது முதலில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் பாஜக கூட்டணியில் சேர்ந்த பிறகு அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்படுகிறது. அப்படியானால், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாஜக எனும் வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தால் தூய்மையாகிவிடுவார்களா?

சச்சின் பைலட் உடன் எந்த மோதலும் எனக்கு இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நான் எந்த ஒரு வேட்பாளரையும் (பைலட் தரப்பு) எதிர்க்கவில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாவது குறித்து கேட்கிறீர்கள். எதிர்க்கட்சிகளின் வேதனை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியில் ஏன் கருத்து வேறுபாடுகள் இல்லை என்பதுதான். காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொருவரின் கருத்தும் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் நடத்தும் கூட்டங்களில் நானும் பங்கேற்கிறேன்.

தற்போது பாஜகவுக்கு இருக்கும் மிகப் பெரிய கவலையே, காங்கிரஸ் கட்சியில் எடுக்கப்படும் சுமுக முடிவுகளைப் பற்றியதாகத்தான் உள்ளது. கடவுளின் ஆசியோடு நீங்கள் நான்காவது முறையாக முதல்வர் ஆக வேண்டும் என்று ஒரு பெண் என்னிடம் கூறினார். அதற்கு, முதல்வர் பதவியை விட்டு விலக வேண்டும் என்றே விரும்புகிறேன்; ஆனால் அந்த பதவிதான் என்னை விட்டு விலக மறுக்கிறது என்று பதில் அளித்தேன்" என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE