கைதுக்கு எதிராக நியூஸ் கிளிக் நிறுவனர் மனு: டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களுக்கு பதில் அளிக்க டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் பிரஷாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுக்களை மூன்று வாரங்களுக்குப் பின்னர் பட்டியலிட முடிவு செய்தனர். இந்த நிலையில், மனுதாரர்களான பிரபிர் புர்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் தேவதத் காமத் ஆகியோர் மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 72 வயதான தனது மனுதாரர் ஏற்கெனவே சிறையில் இருக்கிறார் என்று கபில் சிபல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த மனுக்களுக்கு அக்டோபர் 30-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி டெல்லி போலீஸாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அக்டோபர் 16-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு ஆஜரான கபில் சிபில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுகொண்ட தலைமை நீதிபதி, வழக்கின் விபரங்களை வழங்குமாறு கூறி அவரச வழக்காக விசாரிக்க சம்மதித்தது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, நியூஸ் கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா உட்பட இருவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், கைது நடவடிக்கை, ரிமாண்ட் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சீன நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் பிரபிர் புர்கயஸ்தாவும், அமித் சக்ரவர்த்தியும் அக்டோபர் 3-ம் தேதி சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, டெல்லி போலீஸின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் இருவரிடமும் 7 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் தாங்கள் கைது செய்யப்பட்டதையும், 7 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளித்ததையும் எதிர்த்து பிரபிர் புர்கயஸ்தா, அமித் சக்ரவர்த்தி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இருவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரபிர் புர்கயஸ்தாவையும் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தது சட்டத்தின் முன் நிற்காது. இருவர் தரப்பிலும் வழக்கறிஞர்கள் இல்லாத நிலையில் அவசர அவசரமாக அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது என வாதிட்டார்.

டெல்லி போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர்கள் இருவர் மீதும் உள்ள குற்றச்சாட்டு என்பது மிகவும் அபாயகரமானது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் நோக்கில் சீனவைச் சேர்ந்த நபர் ஒருவர் மூலம் ரூ. 75 கோடியை இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி துஷார் ராவ் கெடிலா, இரண்டு மனுக்களும் விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி இருவர் மீதும் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அளிக்கையில், சீனாவில் இருந்து அதிக அளவிலான நிதி இவர்களின் நிறுவனத்துக்கு வந்ததாகவும், அது இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தியா மீதான பற்றுக்கு எதிராக இவர்கள் செயல்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் மீதான குற்றச்சாட்டை இருவரும் நிராகரித்திருந்தனர். இது தவறான குற்றச்சாட்டு என்றும் மோசடியானது என்றும் சீனாவிடம் இருந்து ஒரு பைசா கூட பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE