“மணிப்பூரில் விரைவில் இணைய சேவை மீட்டெடுக்கப்படும்” - முதல்வர் பிரேன் சிங்  அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை மீட்டெடுக்கப்படும் என்று மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர், நாகாக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள உக்ரூல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பிரேன் சிங், "இணைய சேவை இல்லாமல் மக்கள் சந்தித்துவரும் அவதியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில சக்திகள் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவதால் இணைய சேவையைத் தடை செய்யும் நிர்பந்தத்துக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை திரும்பக் கிடைக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அன்று பகலில், உக்ரூல் மற்றும் கம்ஜோங் மாட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ரூ.64.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் துவக்கி வைத்தார். அப்போது பேசிய பிரேன் சிங், "மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப உக்ரூல் நகரத்தை வளர்ச்சி அடையச் செய்ய அரசு ஆவர்மாக உள்ளது. தலைநகர் இம்பாலுக்கு அடுத்து உக்ரூல் மிக முக்கியமான ஒரு நகரம். ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்காக நகரில் குடிநீர் வசதியை பெருக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.180 - ரூ.200 கோடி செலவில் ஓர் அணை கட்ட திட்டமிடப்பட்டு வருகிறது" என்றார். மேலும், போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் சமூதாயத் தலைவர்கள், கிராமத்தின் தலைவர்களின் நிலையான ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பெண்கள் ஊர்வல வீடியோ: மணிப்பூரில் குகி மற்றும் மைதேயி இன மக்களுக்கிடையே ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து மாநிலத்தில் இணைய சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனிடையே குறிப்பிட்ட பகுதியில் இணைய சேவை வழங்கப்பட்ட போது, கடந்த மே 4-ம் தேதி தெளபால் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஜூலை 19-ம் தேதி வீடியோ மூலம் வெளியாகி தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாநிலத்தில் இணையத் தடை முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையிலும், அந்தத் கொடூரம் வெளியே வந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் மீண்டும் இணைய சேவை தடை செய்யப்பட்டது.

மாணவர்கள் கொலை: பின்னர் மீண்டும் மாநிலத்தில் அமைதி திரும்பிய நிலையில் இணைய சேவைக்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மைத்தேயி இனத்தை சேர்ந்த 2 மாணவர்கள், குகி இனத்தை சேர்ந்தவர்களால் கடத்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் என்ற 20 வயது மாணவனும், ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி என்ற 17 வயது மாணவியும் கடந்த ஜூலை 6-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு சடலங்களாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. இந்தச் சம்பவம் மீண்டும் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

கலவரம் பின்னணி: மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில், அவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி முதல் மோதல் ஏற்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் கலவரத்தில் இதுவரை 175க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர். இதுவரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மணிப்பூர் மக்களை தொகையில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் இம்பால் சமவெளிப்பகுதிகளில் வாழ்கின்றனர். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE