''அமித் ஷாவின் மகன் பாஜகவில் இல்லை'' - ராகுல் காந்திக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா பதில்

By செய்திப்பிரிவு

கவுகாத்தி: "வாரிசு அரசியலின் அர்த்தத்தை முதலில் ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அவர் பிசிசிஐ -யை பாஜகவின் ஒரு பிரிவு என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். பரிதாபத்துக்குரிய அறிவிலி" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மகன்கள் குறித்து கேள்வி எழுப்பி ‘வாரிசு அரசியல்’ குறித்து அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசியுள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "முதலில் வாரிசு அரசியல் என்பதன் அர்த்தத்தை அவர் (ராகுல் காந்தி) புரிந்துகொள்ள வேண்டும். அமித் ஷாவின் மகன் பாஜகவில் இல்லை. ஆனால் ராகுல் காந்தியின் ஒட்டுமொத்த குடும்பமும் காங்கிரஸில் இருக்கிறது.

ராகுல் காந்தியின் குடும்பத்தில், அம்மா, அப்பா, தாத்தா, சகோதரி என எல்லோரும் கட்சியைக் கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்தார்கள் / இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை பிரியங்கா காந்தி கட்டுப்படுத்துவதைப் போல ராஜ்நாத் சிங்கின் மகன் ஒன்றும் பஜகவைக் கடுப்படுத்தவில்லை. இந்த விவாதத்தில் அமித்ஷாவின் மகன் எங்கிருந்து வருகிறார். அவர் பாஜகவில் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள மிசோரம் மாநிலத்தில் பிரச்சாரத்துக்காக சென்றிருந்த ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் பேசும் போது, "காங்கிரஸ் கட்சி வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது என பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித் ஷா மகன் என்ன செய்கிறார். அவர்தான் இந்திய கிரிக்கெட்டை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE