69-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: அல்லு அர்ஜூன், மாதவன் உட்பட பலர் விருதுகளை பெற்றனர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற 69-வது தேசிய திரைப்பட விருது விழாவில், அல்லு அர்ஜூன், எஸ்.எஸ்.ராஜமவுலி, கீரவாணி, தேவி ஸ்ரீ பிரசாத், மாதவன் உட்பட பலருக்கு குடிரயரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு, 2021-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் நடிகர் மாதவன் இயக்கிய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட், ஆர்ஆர்ஆர் மற்றும் புஷ்பா திரைப்படங்கள் பல விருதுகளை பெற்றன. புஷ்பா படத்தில் நடித்த நடிகர் அல்லு அர்ஜூன் முதல் முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அந்தப் படத்தின் இசையமைப்பாளர் தேவி பிரசாத்தும், சிறந்த இசைய மைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார்.

ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல தேசியவிருதுகளை பெற்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, சிறந்த இசை இயக்கத்துக்கான விருதை பெற்றார். சிறந்த பாடகருக்கான விருதை கால பைரவா பெற்றார். சிறந்த நடனத்துக்கான விருதை பிரேம் ரக்ஷித் பெற்றார். ஸ்பெஷல் எஃபெக்ட் மற்றும் சிறந்த சண்டை காட்சிகளுக்கான விருதுகளையும் ஆர்ஆர்ஆர் படக்குழு பெற்றது. பாடலாசிரியர் சந்திரபோஸுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது. கருவறை ஆவணப்படத்துக்கு இசையமைத்ததற்காக காந்த் தேவாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

மாநில மொழி பட வரிசையில் கடைசி விவசாயி சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பெற்றது. இரவின் நிழல் படத்தில் பாடியதற்காக பாடகி ஷ்ரேயா கோஷல் சிறந்தபாடகிக்கான விருதை பெற்றார். கன்னடத்தில் சார்லி 777 படம் சிறந்த கன்னட படத்துக்கான விருதைபெற்றது. சிறந்த மலையாள படத்துக்கான விருதை ஹோம் திரைப்படம் பெற்றது.

இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் ஆலியா பட், ரன்பிர் கபூர், கரண் ஜோகர் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE