தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண வழக்கு | உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், தன் பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்க சிறப்பு திருமண சட்டத்தினை ரத்து செய்தால் அது நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு இழுத்துச் செல்லும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் சட்டத்தை உருவாக்க முடியாது சட்டத்தை கையாள மட்டுமே முடியும். சிறப்புத் திருமண சட்டத்தை ரத்து செய்யவோ, அதற்குள் அர்த்த்ங்கள் கற்பிக்கவோ முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வழக்கில் தொடர்ந்து 10 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் அவ்வழக்கில் தற்போத தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தற்போது தனது தீர்ப்பினை வாசித்து வருகிறார். அவர் தனது தீர்ப்பில், "மொத்தம் நான்கு தீர்ப்புகள் உள்ளன. என்னிடம் ஒரு தீர்ப்பும், நீதிபத கவுல், நீதிபதி பட், மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோரிடம் ஒவ்வொரு தீர்ப்பு உள்ளன.

நாம் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதற்கு சில உடன்பாடுகள், மாறுபாடுகள் உள்ளன. இந்த நீதிமன்றத்தால் சட்டத்தை இயற்ற முடியாது. அதனை விளக்க மட்டுமே முடியும். தன்பாலின திருமணம் நகர்ப்புறம் சார்ந்தது என்று கூறமுடியாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது சட்டமே தவிர செயல்பாடுகள் அல்ல. திருமணம் என்ற எண்ணம் நிலையானது இல்லை அது மாற்றத்துக்கு உட்பட்டது.

சிறப்பு திருமண சட்டம் தவிர வேறு எந்தச் சட்டத்திலும் நீதிமன்றம் செல்லவில்லை. சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தால் மட்டுமே முடியும். சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தால் அது நம்மை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்துக்கு கொண்டு செல்லும" என்று கூறியுள்ளார். தொடந்து தனது தீர்ப்பினை வாசித்து வருகிறார்.

வழக்கு கடந்து வந்த பாதை: 2018-இல் நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘18 வயதைக் கடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு குற்றம் அல்ல’ என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது பாலின ஈர்ப்பை மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், பிற உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் நீண்ட போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணம் செய்துகொண்டோ செய்துகொள்ளாமலோ இணைந்து வாழ்தல் என்பது காதல் உறவின் இயற்கையான நீட்சி. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்குக் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கிக்கொள்வது தொடங்கி குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வது, சொத்தில் பங்கு கோருவது வரையிலான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

தன்பாலின இணையர்களுக்கிடையிலான திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான தனிச் சட்டங்கள் மதங்கள், சாதிகளைக் கடந்த திருமணங்களையும் அங்கீகரிப்பதில்லை. அதுபோன்ற திருமணங்கள் சிறப்புத் திருமணச் சட்டம் 1954இன் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களையும் அதன் கீழ் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்கள் மீறப்படும்போது சமூக அமைதி சீர்குலையும் என்கிற மத்திய அரசின் கவலையைப் புறந்தள்ளிவிட முடியாது.

அதே நேரம் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவை சார்ந்த பாகுபாடுகளைக் களைவதைப் போலவே பாலின ஈர்ப்பு, பாலியல் தெரிவு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைய வேண்டியதும் அரசின் கடமைதான். இதை உணர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான தனது முடிவை மத்திய அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த சமூகத்தின் மனநிலையும் மாற வேண்டும் என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE