பெண்ணின் 26 வார கருவை கலைக்க அனுமதி வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: திருமணமான ஒரு பெண் (27) தன்னுடைய 26 வார கருவைக் கலைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “எனக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. 3-வதாக கருத்தரித்திருக்கிறேன். இதனால் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தக் குழந்தையை பெற்றெடுக்க முடியாத நிலையில் உள்ளேன். எனவே கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர், கருவை கலைக்க அனுமதி வழங்கி கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதில், “பெண்ணின் கருவை கலைக்கக் கூடாது என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிவுறுத்தி உள்ளது” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.

குறிப்பாக, இந்த அறிக்கையை முன்கூட்டியே தாக்கல் செய்திருந்தால், கருவைக் கலைக்க அனுமதித்திருக்க மாட்டேன் என ஹிமா கோலி தெரிவித்தார். ஆனால், பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதி நாகரத்னா, மத்திய அரசின் மனுவை நிராகரித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:பெண்ணின் கரு 26 வாரங்கள் 5 நாட்கள் ஆகிவிட்டது. இந்த சூழ்நிலையில், கருவைக் கலைக்க உத்தரவிட்டால் அது கருக்கலைப்பு சட்டத்தின் 3, 5-வது பிரிவை மீறுவதாக ஆகிவிடும். அதேநேரம் தாயின் உடல்நலனுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று மருத்துவ அறிக்கை கூறுகிறது. எனவே, அந்தக் குழந்தையின் இதயத் துடிப்பை நிறுத்த உத்தரவிட முடியாது.குழந்தை வேண்டாம் என்றால் 26 வாரங்கள் கழித்து நீதிமன்றத்தை அணுகியது ஏன்? குழந்தை பிறக்கட்டும். தாய் விரும்பவில்லை என்றால் குழந்தையை அரசு பராமரிக்கட்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணமான பெண்கள், பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமானவர்கள் கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்கு உட்பட்ட கருவைக் கலைக்கலாம். அதற்கு மேலான கருவை கலைக்க நீதிமன்ற அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE