“மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை” - மிசோரம் பிரச்சாரத்தில் ராகுல் சாடல்

By செய்திப்பிரிவு

அய்ஸ்வால்: அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தி எம்.பி. இன்று (திங்கள்கிழமை) நடைபயணத்துடன் தொடங்கினார். மணிப்பூர் மாநிலத்தை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை என்று அவர் சாடினார்.

இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை மிசோரம் தலைநகர் அய்ஸ்வால் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள சன்மாரி சந்திப்பில் இருந்து ட்ரஷரி சதுக்கம் வரையிலான 2 கி.மீ., தூரம் பாத யாத்திரையைத் தொடங்கினார். அவருக்கு ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர். ராகுல் காந்தியும் சாலையின் இருபுறமும் கூடிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். தன்னைச் சந்திக்க வந்தவர்களுடன் கைகுலுக்கி உரையாடினார். பின்னர் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகிறார். பின்னர் மாலையில் மாணவர்களுடன் உரையாடல் நடத்துகிறார்.

நாளை (செவ்வாய்க் கிழமை) காலையில் மிசோரம் மாநில காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்கும் ராகுல், பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அகர்தலா வழியாக டெல்லிக்குச் செல்வதற்கு முன்பாக லுங்லியில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகிறார்.

முன்னதாக, அய்ஸ்வாலில் பேசிய ராகுல் காந்தி, "இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் அக்கறை காட்டும் பிரதமர் மோடியும், மத்திய அரசும் மணிப்பூரில் நடப்பது குறித்து அக்கறை காட்டாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மணிப்பூரில் மக்கள் கொல்லப்பட்டனர்; பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் பிரதமர் அங்கு செல்வதற்கு இன்னும் முக்கியமான காரணத்தை கண்டுபிடிக்கவில்லை.

இஸ்ரேல்

மணிப்பூரில் மோதல் தொடங்கியதில் இருந்து பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. மணிப்பூர் மோதல் என்பது பிரச்சினையின் அறிகுறி மட்டுமே. மணிப்பூரில் நடந்தது இந்தியா என்ற சிந்தனையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலே" என்று ராகுல் காந்தி கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு: இதனிடையே, காங்கிரஸ் கட்சி மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி, மாநில காங்கிரஸ் தலைவர் லால்சவ்தா அய்ஸ்வால் மேற்கு -3 தொகுதியில் (எஸ்.டி) போட்டியிடுகிறார். அய்ஸ்வால் வடக்கு-1 (எஸ்டி) தொகுதிக்கு லால்னுமவியா சுயாங்கோ பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மிசோரம் மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி அங்கு சென்றுள்ளார். மாநிலத்தில் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE