காங்கிரஸ் கட்சியால் கொள்ளை அடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் - ஜெ.பி.நட்டா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியால் கொள்ளையடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி ஊழல் மூலம் தேர்தலுக்கு நிதியளிக்கும் ஏடிஎம் இயந்திரமாக கர்நாடகாவை மாற்றியுள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா இன்று (திங்கள்கிழமை வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், "வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில் தேர்ந்த காங்கிரஸ் கட்சி இப்போது ஒரு படி மேலே போய் உத்திரவாதம் அளிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் சில ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது, வாக்காளர்களை கேவலப்படுத்தும் கேலிகூத்தாகும். இது காங்கிரஸ் கட்சியின் ஊழல் டிஎன்ஏவின் ஒரு சிறிய எடுத்துக்காட்டு.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும்,'சுரசா'வின் வாய் போல ஊழல் பரவி உள்ளது. இதே காங்கிரஸ் ஆதரவு ஒப்பந்ததாரர்கள் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக பொய்யான கமிஷன் புகாரை எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சி பணமோசடி, ஊழல் மூலமாக வரவிருக்கும் தேர்தலுக்கான ஏடிஎம் இயந்திரமாக கர்நாடகாவை மாற்றி வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. காங்கிரஸ் கட்சியால் கொடுக்க முடிந்த ஓர் உத்தரவாதம் ஊழலுக்கான உத்தரவாதம் மட்டுமே. காங்கிரஸுன் ஊழலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ராஜஸ்தானையும், சத்தீஸ்கரையும் ஊழலின் ஏடிஎம்-மாக மாற்றியுள்ள காங்கிரஸ் அரசு இப்போது தெலங்கானா, மத்தியப் பிரதேசம் ஆகியவைகளையும் அதே போல ஏடிஎம்களாக மாற்றி ஏழைமக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொள்ளையடிக்க நினைக்கின்றது. அதனாலேயே அந்த இருமாநிலங்களிலும் காங்கிரஸ கட்சி ஆட்சிக்கு வரத்துடிக்கிறது. காங்கிரஸ் கட்சியால் ஊழலுக்கான உத்தரவாதத்தை மட்டுமே கொடுக்க முடியும்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடாவில் நடந்த சோதனையில் ஒரு ஒப்பந்ததாரர், அவரது மகன், உடற்பயிற்சி பயிற்றுனர், மற்றும் ஒரு கட்டிட பொறியாளர் உள்ளிட்ட பலரிடமிருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் பலகோடி ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருகட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்க இருகட்சிகளுமே முயல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE