மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் விநியோகம் - உ.பி. காவல் அதிகாரிகள் உட்பட 24 பேருக்கு 10 ஆண்டு சிறை

By செய்திப்பிரிவு

ராம்பூர்: கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) மீது மாவோயிஸ்டுகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், காவல் துறை அதிகாரி ஒருவரும் 75 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணையில், காவல் துறையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சிலர் மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் வழங்கியது தெரிய வந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கில், நேற்றுமுன்தினம் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 24 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தைத் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் ஆவர்.

ராம்பூரிலிருந்து மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் விநியோகிக்கப்படுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏப்ரல் 29, 2010-ம் ஆண்டு ராம்பூர் விரைந்த குழு, 3 பேரை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஆயுத விநியோகத்தில் உத்தர பிரதேச காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் படையினருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவ்வழக்குத் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் அனைவர்மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE