பெங்களூருவில் வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.42 கோடி - தெலங்கானா தேர்தலுக்காக பதுக்கி வைத்த பணமா?

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த ஒப்பந்ததாரர் அம்பிகாபதி (61) கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி அஸ்வதம்மா (58) முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஆவார்.

அம்பிகாபதி பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணை தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த பாஜக ஆட்சியின்போது ஒப்பந்ததாரர்களிடம் அமைச்சர்கள் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அரசை 40 சதவீத கமிஷன் சர்க்கார் என விமர்சித்தது.

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினரான அம்பிகாபதிக்கு தெலங்கானா அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் அங்கு விரைவில் நடைபெறும் தேர்தலுக்காக‌ பண பட்டுவாடா செய்வதற்கு கோடிக்கணக்கான பணத்தை கார் மூலம் கடத்த இருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் அம்பிகாபதியின் வீடு,அவரது சகோதரர் பிரதீப் வீடு, மகள் சுவாதியின் வீடு ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அப்போது அம்பிகாபதியின் வீட்டின் தரை தளத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்த அறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கு 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் அம்பிகாபதியின் படுக்கையறையில் இருந்த மெத்தைக்கு அடியிலும் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் அம்பிகாபதி, அவரது மனைவி அஷ்வதம்மா, சகோதரர் பிரதீப் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது இந்த பணத்துக்கும் தெலங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவுக்கும் தொடர்பு உள்ளதா? இதனை ஹைதராபாத்துக்கு கடத்த முயற்சிக்கப்பட்டதா? என கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE