அபாய ஒலி சத்தத்தை கேட்டு கண்விழித்தோம்: இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்கள் பேட்டி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘குண்டு வீச்சு அபாய ஒலி சத்தத்தை கேட்டு கண்விழித்தோம். கடந்த சில நாட்களாக பீதி நிலவியது’’ என இஸ்ரேலில் இருந்து வந்த இந்தியர்கள் கூறினர்.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 7-ம் தேதி ராக்கெட் குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலில் 700 பேர் உயிரிழந்தனர். 2,100 பேர் காயம் அடைந்தனர். இது இஸ்ரேலில் கடந்த 50 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தாக்குதல்.

இதையடுத்து காசா பகுதியில் இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியது. காசா மீது இஸ்ரேல் போர் தொடுப்பதால், இஸ்ரேலில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு 18,000 இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை, அழைத்து வர ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தை இந்தியா தொடங்கியது. இந்தியாவில் இருந்து சென்ற சிறப்பு விமானத்தில் முதல் கட்டமாக சுமார் 200 இந்தியர்கள் நாடுதிரும்பினர். அவர்கள் இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக சந்தித்த பீதியான சூழல் குறித்து பேட்டியளித்தனர்.

இஸ்ரேலில் வேளாண் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சஸ்வத் சிங்மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று டெல்லி திரும்பினர். சஸ்வத்சிங் அளித்த பேட்டியில், ‘‘ இஸ்ரேலின் மத்திய பகுதியில் நாங்கள் தங்கியிருந்தோம். கடந்த சில நாட்களாக குண்டு வீச்சு அபாய ஒலி சத்தத்தை கேட்டு கண் வழித்தோம். உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி, இஸ்ரேல் அரசு ஆங்காங்கேஅமைத்துள்ள கவச அறைகளில் சென்று பதுங்கினோம். இந்திய அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை பாராட்டத்தக்கது. இஸ்ரேலில் விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறோம். அங்கு இயல்பு நிலை திரும்பியதும் நாங்கள் எங்கள் பணியை தொடர்வோம். இந்திய அரசு இ-மெயில் மூலம் எங்களுக்கு தகவல் அனுப்பியது. எங்களை மீட்டு வந்த பிரதமர் மோடிக்கும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்துக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்’’ என்றார்.

இஸ்ரேலின் பென்-குரியன் பல்கலைக்கழகத்தில் பயிலும் பி.எச்.டி மாணவர் சுபர்னோ கோஷ்கூறுகையில், ‘‘என்ன நடந்தது என்றே எங்களால் அறிய முடியவில்லை. கடந்த வாரம் சனிக்கிழமை திடீரென ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் கவசஅறைகளுக்கு சென்று பதுங்கினோம். இஸ்ரேல் அரசு அனைத்துபகுதிகளிலும் கவச அறைகளை அமைத்துள்ளது மிகவும் நல்ல விஷயம். அதனால் நாங்கள் பாதுகாப்பாக இருந்தோம்’’ என்றார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவி மினி சர்மா கூறுகையில், ‘‘ தாக்குதல் நடந்தபோது பதற்றமான சூழல்நிலவியது. அபாய ஒலி ஒலிக்கும்போதெல்லாம் எங்களுக்கு பயமாக இருக்கும். இந்தியாவில் இருந்து மீட்பு விமானம் வருகிறது என தூதரகம் மூலம் தகவல்பெற்றதும், நாங்கள் புறப்பட்டுவிட்டோம். இந்திய தூதரக அதிகாரிகள் மிகவும் உதவியாக இருந்தனர்’’ என்றார்.

தீபக் என்ற மாணவர் கூறுகையில், ‘‘சனிக்கிழமை அன்றுதான் அபாய ஒலி சத்தத்தை கேட்டோம். பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி இஸ்ரேல் அதிகாரிகள் எங்களுக்கு விளக்கினர். சிக்கலான நேரத்தில் நாடு திரும்பியது மகிழ்ச்சி. அதே நேரத்தில் எங்கள் நண்பர்கள் இஸ்ரேலில் இருப்பது வருத்தமாக உள்ளது. நாடு திரும்பும் நடைமுறை எளிதாக இருந்தது’’ என்றார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த டுட்டி பேனர்ஜி கூறுகையில், ‘‘ இஸ்ரேலில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. மக்கள் பீதியுடனும், கோபத்துடனும் உள்ளனர். நான்நாடு திரும்பி யபோதும், அபாய ஒலிகேட்டது. நான் கவச அறைக்கு சென்றுவிட்டுதான் விமான நிலையம் வந்தேன்’’ என்றார்.

சோனி என்ற மாணவி கூறுகையில், ‘‘எங்கள் நலனில் அக்கறை செலுத்திய இந்திய அரசுக்கு நன்றி.இந்திய அரசு எப்போது மீட்கும்என தெரியாததால், நான் இரண்டு விமானங்களில் முன்பதிவு செய்திருந்தேன். தாயகம் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியர்கள் பலர் இன்னும் இஸ்ரேலில் உள்ளனர்.

இவ்வாறு இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பியவர்கள் கூறினர். இவர்களை டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE