சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தெலங்கானாவில் 4 நாட்களில் ரூ.37 கோடி, தங்கம் பறிமுதல்

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும், சட்டவிரோதமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.37 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்க நகைகள், போதை மருந்துகள் மற்றும் மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் 30-ம் தேதி 119 தொகுதிகளுக்கு சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், சட்டவிரோதமாக பணம், தங்கம், மதுபானங்கள் போன்றவை கடத்தப்படுகிறதா என அம்மாநிலம் முழுவதும் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.20 கோடி ரொக்கம், ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ரூ.89 லட்சம் மதிப்புள்ள போதை மருந்துகள், ரூ.87 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், ரூ.22 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் சிக்கின என தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில எல்லைகளில் மொத்தம் 89 இடங்களிலும், தெலங்கானா முழுவதும் மேலும் 169 இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக 1,476 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தேர்தல் பாதுகாப்புக்காக ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக தெலங்கானா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE