“மனச்சோர்வு, மிகுந்த கவலை அடைந்தேன்” - ரயில் விபத்து குறித்து பிஹார் முதல்வர் வேதனை

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலம் பக்ஸரில் வடகிழக்கு விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி 12 மணிநேரம் கடந்த நிலையில், இந்த விபத்து மனச்சோர்வினையும் மிகுந்த கவலையையும் தந்தது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டெல்லியில் உள்ள ஆனந்த விகார் ரயில் நிலையத்தில் இருந்து கவுகாத்தியில் உள்ள காமாக்யா நிலையத்துக்கு சென்ற வடகிழக்கு விரைவு ரயில், பக்ஸரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த கோரசம்பவத்தால் மிகுந்த மனச்சோர்வும், வேதனையும் அடைந்துள்ளேன். விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர்மிகு நேரத்தில் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு இழப்பினைத் தாங்கும் சக்தியினை வழங்க இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி அரசு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்/

முன்னதாக, டெல்லியில் இருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், புதன்கிழமை இரவு 9.35 மணி அளவில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே தடம் புரண்டது. ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, கிழக்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, காசி பாட்னா ஜன் ஸதாப்தி விரைவு ரயில் மற்றும் பாட்னா காசி ஜன் ஸதாப்தி விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரயில் விபத்தை அடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் விபத்து தொடர்பான தகவல்களை அவருக்குத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE