இளைஞர்களின் மேம்பாட்டுக்காக ‘மேரா யுவ பாரத்’ தன்னாட்சி அமைப்பு!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது:

இளைஞர்களின் மேம்பாட்டுக்காக ‘மேரா யுவ பாரத்’ (எனது பாரதம்) என்ற பெயரில் தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ம் தேதி இந்த அமைப்பு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும். அரசாங்கம் மற்றும் குடிமக்களுக்கு இடையே இந்த அமைப்பு பாலமாக செயல்படுவதன் மூலம் இளைஞர்களின் ஆற்றலை தேச கட்டுமானத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கும்.

தூய்மை இந்தியா போன்ற அரசின் பல்வேறு திட்டங்களிலும் கோ-வின், ஆரோக்கிய சேதுபோன்ற செயலிகள் உருவாக்கத்திலும் கரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் உருவாக்குவதிலும் இளைஞர்கள் முன்னணியில் இருந்தனர். அவர்களிடையே தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

‘எனது பாரதம்’ ஒரு லட்சிய அமைப்பாக இருக்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்கள் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்ற இந்த அமைப்பின் கீழ் கைகோத்து செயல்படுவார்கள்.

கல்வி, அனுபவக் கற்றல், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்கள் வாய்ப்புகளை தேடுவதற்கும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல்படுவதற்கும் இது ஒரு தளமாக இருக்கும்.

அனுபவக் கற்றல் மூலம் இளைஞர்களின் தலைமைத்துவ வளர்ச்சிக்கு இந்த அமைப்பு வழிவகுக்கும்.

இளைஞர்களின் விருப்பங்கள் மற்றும் சமூகத்தின் தேவைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு இந்த அமைப்பு வழிவகுக்கும். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இளைஞர்களின் செயல்திறனை மேம்படுத்தும். இவ்வாறு அமைச்சர் அனுராக் தாக்குர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE