‘‘அப்பா நலமாக இருக்கிறார்’’- அமர்த்தியா சென் குறித்த வதந்திகளுக்கு மகள் மறுப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார மேதை அமர்த்தியா சென் உடல்நிலை குறித்த செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ள அவருடைய மகள் நந்தனா சென், “அப்பா நலமுடன் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், "நண்பர்களே, உங்கள் அக்கறைக்கு நன்றி, ஆனால் சொல்லப்பட்டவை அனைத்தும் போலிச் செய்தி. பாபா (அப்பா) நலமாக இருக்கிறார். நாங்கள் குடும்பத்துடன் கேம்பிரிட்ஜில் ஓர் அற்புதமான வாரத்தை ஒன்றாகக் கழித்தோம். நேற்றிரவு எப்பொழுதும் போல் எங்களை பாபா அரவணைத்து வாழ்த்துச் சொன்னபிறகே நாங்கள் விடைபெற்றோம். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வாரத்திற்கு இரண்டு பாடங்களை கற்பிக்கிறார். எப்போதும் போல் பிஸியாக இருக்கிறார்" எனப் பதிவிட்டு, அமர்த்தியா சென் இறந்ததாக வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கூடவே, தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் நந்தனா பகிர்ந்துள்ளார்.

அமர்த்தியா சென் பின்னணி: மேற்கு வங்க மாநிலம் சாந்தி நிகேதனில் பிறந்தவர். இவருக்குப் பெயர் வைத்தவர் தாகூர். விஸ்வபாரதி பள்ளியில் படித்தார். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியா, இங்கிலாந்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பொருளாதாரக் கோட்பாடு, அரசியல் தத்துவம், பொது சுகாதாரம், பாலின ஆய்வுகள் உட்பட பல துறைகளில் இவரது ஆய்வுகள் விரிவடைந்துள்ளன.

‘கலெக்டிவ் சாய்ஸ் அண்ட் சோஷியல் வெல்ஃபர்’ என்ற அவரது முதல் புத்தகம் 1970-ல் வெளிவந்தது. பொருளாதாரம், வாழ்வுரிமை, வாழ்வாதாரம் தொடர்பாக மிகச் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், புத்தகங்களை எழுதியுள்ளார். தனது ஆராய்ச்சி மூலம் அரசு நிர்வாகம், சர்வதேச நிறுவனங்களின் பொருளாதாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளின் தரத்தை மேம்படுத்தினார். சமூகத் தேர்வு (Social Choice) என்ற கருத்தியலை ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளார். பொருளாதாரத்தையும் தத்துவத்தையும் இணைத்த முதல் பொருளாதார நிபுணர் இவரே.

வறுமையை அளவிட இவர் வகுத்துத் தந்த வழிமுறைகள், ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளன. இவரது பொருளாதார சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டன. ஆய்வுக்காக சைக்கிளில் பயணம் செய்த அமர்த்தியா சென்னின் பங்கு என்பது பொருளாதாரத் துறையில் மகத்தானது.

மக்களின் முன்னேற்றமே உண்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவரும் என்பதை வலியுறுத்துபவர். பொருளாதாரத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டி, 1998-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிரதிச்சி என்ற அமைப்பை உருவாக்கி, பரிசுத் தொகை முழுவதையும் பெண் குழந்தைகள் கல்விக்காக வழங்கிவிட்டார். பொருளாதாரம் தவிர, மனித நேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய பல களங்களில் இவருடைய சேவைகளைப் பாராட்டி பல நாடுகள் இவருக்கு ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளன. 1999-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்