மத்திய அரசின் தாராளமய இறக்குமதி கொள்கையால் விவசாயிகளுக்கு நெருக்கடி: காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தாராளமய இறக்குமதி கொள்கை, நாட்டில் விவசாயிகளுக்கு பெரிய நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலையை விட சோயாபீன்ஸ் மிகவும் குறைவான விலைக்கு விற்கப்படுகின்றன.பல மாநிலங்களில் பாலுக்கு நல்ல விலை இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மோடி அரசின் தாராளமய இறக்குமதி கொள்கை, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மலிவான இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சோயாபீன்ஸ் குறைந்தபட்ச ஆதார விலையை விடவும் குறைவாக விற்கப்படுகின்றன.

இந்த இரு மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் மலிவான பாமாயில் இறக்குமதி காரணமாக பால் விலை குறைந்துள்ளது. இது நெய்யில் காய்கறி கொழுப்பினை கலப்பதற்கு வழிவகை செய்கின்றது. குறைந்த அளவே பால் கிடைப்பதால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் இரண்டு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE