குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்கள் பாஜகவிற்கு எதிராக வாக்காளிக்க தயாராகி விட்டனர் என படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழு தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.
குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னெடுத்தவர் ஹர்திக் படேல். ‘படிதார் அனாமத் அந்தோலன்’ அமைப்பின் தலைவரான அவர் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்திற்கிடையே அவர் அளித்த பேட்டி:
குஜராத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
குஜராத்தில் பாஜகவின் ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பாஜகவின் மிக மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சியில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை. எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு ஏராளமான அளவில் மக்கள் வருகின்றனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராகி விட்டனர்.
ஆனால் உங்கள் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என பாஜகவினர் கூறுகின்றனேரே?
குஜராத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது. பாஜகவினர் கூறுவது உண்மை என்றால் பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும். பாஜகவின் மீது நம்பிக்கை இழந்த மக்கள், ஏராளமான அளவில் எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு திரண்டு வருகின்றனர். படேல் சமூக மக்கள் மட்டுமின்றி பழங்குடியினர்கள் கூட எனது கூட்டத்திற்கு அதிகஅளவில் வருகின்றனர். இடஒதுக்கீடு போராட்டத்தை விலக்கிக் கொள்ள எனக்கு பாஜகவினர் 1,200 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர். இதை மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். ஆனால், படேல் சமூக மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த குஜராத்தின் நலனுக்காக அதை நான் நிராகரித்து விட்டேன். அதே பாஜகவினர் தற்போது தேர்தலுக்காக, 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கின்றனர்.
இடஒதுக்கீடு தவிர இந்த தேர்தலில் நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?
அரசியலில் தலைமையை வழிபடும் கலாச்சாரத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் இந்த கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தார் அவரது வழியை நானும் பின்பற்றுகிறேன். மக்கள் தங்கள் உரிமைக்காக போராட அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
குஜராத் தேர்தலில், உங்கள் பிரச்சாரத்தால் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் பாஜகவின் நடவடிக்கையை குஜராத்தின் அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அழுது புலம்புகின்றனர். மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கல்விக்காக மக்கள் செலவழிக்கும் பணம் அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி பாஜகவினர் பேசுகின்றனர். குஜாரத்தின் உள்பகுதி சாலைகளை பாருங்கள். பாஜக ஆட்சியில் அவை மிக மோசமாக உள்ளது.
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் உங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிறகு உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கூட்டத்திற்கு செலவு செய்தது யார் என்பது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்துகிறதே?
இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதற்கும் தயாராக உள்ளனர். எவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இடஒதுக்கீடு போராட்டத்தின் போதும் இதேபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டார்கள். என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். எங்கள் அமைப்பை சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்து போராட்டத்தை உடைக்க பார்த்தார்கள். இறுதியில் அவர்களின் செயல் வெட்ட வெளிச்சமானது. குஜராத் மக்கள் அவர்களை பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இந்த தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்குவர்.
இவ்வாறு ஹர்திக் படேல் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago