தெலங்கானா உட்பட 5 மாநில தேர்தல் தேதிகள் - இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்கள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் தேர்தலை எதிர்கொள்வதற்கானப் பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் நிலையில், தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று நண்பகல் 12 மணி அளவில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர ராவ் உள்ளார். இவரது 10 ஆண்டு கால ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் கருதப்படுகிறது. தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இம்மாநிலத்தில் பாஜகவும் தற்போது வலுவடைந்துள்ளது. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கரிலும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த மூன்று மாநில தேர்தல்களும் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், இந்த மாநிலங்களில் போட்டியே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான். நாட்டின் இரு பிரதான தேசிய கட்சிகளுக்கு இடையேயான தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது. அந்த வகையில், 5 மாநில தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான உண்மையான களமாகக் கருதப்படுகிறது.

இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெற உள்ளன, வேட்பு மனு தாக்கல் எப்போது தொடங்குகிறது, தேர்தல் தேதி, வாக்குகளை எண்ணும் தேதி என அனைத்து விவரங்களும் அடங்கிய தேர்தல் அட்டவணையை வெளியிட உள்ளார். இந்த அறிவிப்புகளை அடுத்து இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்