கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து - தமிழகத்தை சேர்ந்த 13 பேர் பரிதாப உயிரிழப்பு

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

ஓசூர் அருகே தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடி அருகே நவீன்குமார் என்பவர் இரு பட்டாசுக் கடைகள் வைத்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக கடையில் வாணியம்பாடி, அரூர் டி.அம்மாப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழக பகுதிகளைச் சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று மதியம் கடைக்கு ஒரு கன்டெய்னர் லாரி மற்றும் இரு சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் வந்தன. கடையையொட்டி, கன்டெய்னர் லாரியை நிறுத்தி பட்டாசுகளை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

கடைக்குள் விழுந்த தீப்பொறி இதில் கடைக்குள் விழுந்த தீப்பொறியால் கடையில் இருந்த பட்டாசுகளும் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. தீ மளமளவென பரவியதோடு, வெளியில் நின்ற சரக்கு வாகனங்களில் இருந்த பட்டாசுகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து வந்த அத்திப்பள்ளி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் கடையில் பணியிலிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் தருமபுரி மாவட்டம் டி.அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சச்சின், வேடியப்பன் ஆகியோரது உடல்கள் மட்டும் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

மேலும், கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்டோர் பலத்த காயம்அடைந்தனர். அவர்களை அத்திப்பள்ளி போலீஸார் மீட்டு, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரூ.5 கோடி சேதம்: தீ விபத்தின்போது, கடையின்பின்பகுதி வழியாக தொழிலாளர்கள் சிலர் வெளியேறியதால் உயிர்தப்பினர். விபத்தில், கன்டெய்னர் லாரி, 3 சரக்கு வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த விபத்தில் பட்டாசுகள், வாகனங்கள், பொருட்கள் என ரூ.5கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக கர்நாடகா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE