சாதிவாரி கணக்கெடுப்பு: பிஹாரை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்

By Guest Author

ஜூன் 2022-ல், பிஹாரில் நிதிஷ் குமார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து ரூ.500 கோடியை ஒதுக்கியது. ஆனால் மத்திய அரசு மற்றும் பாஜக ஆதரவாளர்கள் இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் இறுதி யாக பிஹார் அரசுக்கு சாதகமாக தீர்ப்ப ளித்தது. அதனால்தான் இந்த கணக்கெடுப்பு சாத்தியமாகியுள்ளது.

ஏன் கணக்கெடுப்பு தேவை?: ஆனால் இது, நமக்கு ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு தேவை? சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் அதன் தகவல் வெளியிடுவதை ஏன் மோடி அரசு எதிர்க்கிறது? மத்திய அரசு ஏன் அதைச் செய்யவில்லை? பிஹார் போன்ற மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தக் கூடாதா? போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் தனது நாடாளுமன்ற உரையில் அகில இந்திய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை மோடி அரசு வெளியிட வேண்டும் என்று கோரினார். ஆனால், 2023-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ‘‘சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவில்லை’’ என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். உள்துறை அமைச்சகம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், எஸ்சி, எஸ்டி தவிர வேறு எந்தவொரு சாதிக்கும் விரிவான விவரங்கள் சேகரிக்கப்படவில்லை என்பது உண்மைதான்.

இருப்பினும், டாக்டர். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் 2013-ல் ஒரு சிறப்பு சமூக-பொருளாதார- சாதிக் கணக்கெடுப்பை(எஸ்இசிசி) நடத்தியது. அதில் இந்தியாவின் மக்கள் தொகையின் விரிவான சாதித் தகவல்களைச் சேகரித்தது. எஸ்இசிசி தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டு வெளியிடப்படுவதற்கு முன்பு, 2014 பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு, எஸ்இசிசி பகுப்பாய்வை தொடர வேண் டாம் என்று முடிவு செய்தது. எனவே, அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்திய சமூகம் அதீத சமத்துவமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றத் தாழ்வு நோய்க்கு அடிப்படைக் காரணம் சாதி. இந்த நாட்டை நிர்வகிக்கும் இந்திய அரசின் 90 செயலாளர்களில், மூன்று பேர் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறினார்.

இன்னும் சரியான பங்கு தெரியவில்லை என்றாலும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் இந்திய மக்கள் தொகையில் 60-70% ஆக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஒருவர் மேலோட்டமாகப் பார்த்தால், பொதுத்துறை வங்கிகளின் 11,310 மூத்த அதிகாரிகளில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே ஓபிசி/எஸ்சி/எஸ்டி. தேசிய பங்குச் சந்தையின் முதல் 50 நிறுவனங்களின் தலைவர்கள், 104 ஸ்டார்ட்-அப் யூனிகார்ன் நிறுவனர்களில் யாரும் இந்த ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் அல்ல.

அப்படியே இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 60-70% ஓபிசி, எஸ்சி, எஸ்டியாக இருக்கும்போது, வெற்றிகரமான தொழில்முறை பதவிகளில் அவர்களின் பங்கு மிகவும் குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருப்பது எப்படி சாத்தியம்?

மறுபுறம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு தொழிலாளர்கள் 80%, துப்புரவு பணியாளர்கள் 75% ஒடுக்கப்பட்ட சமூக குழுக்களை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதிலிருந்து, ஒடுக்கப்பட்ட சாதிகள் பெரும்பாலான உயர் தொழில்முறை பதவிகளில் இருந்து விலக்கப்பட்டு கடைநிலை வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுவது ஊர்ஜிதமாகியுள்ளது. சமூகத்தில் கடைநிலை வேலைகள் அனைத்தும் அவர்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது. இது, நமது சமூகத்தின் சாதிய அடிப்படையில் சமத்துவமின்மை நோயின் தீவிரத்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வர்க்கப் பிளவு ஒப்புக் கொள்ளப்பட்டாலும், வாழ்வாதாரத்தைத் தீர்மானிப்பதில் சாதி மிகவும் குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது. அப்பட்டமாகச் சொல்வதென்றால், பணக்கார தலித் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு, ஏழ்மையான உயர்சாதிக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் மிக குறைவு.

இந்த சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைக்கு தீர்வாக அதிக இடஒதுக்கீடுகளை உடனடியாகக் கோருவது அவசியம். ஆனால் அதற்கு முன், இந்தியாவின் சாதிப் பிளவு எவ்வளவு ஆழமானது என்பதை முதலில் தெரிந்து கொள்வது முக்கியம். காயத்தின் அளவை புரிந்து கொள்ளாமல், நோய்க்கான மருந்துகளை பரிந்துரைக்க முடியாது. இதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்படுகிறது. சாதிவாரியாக மக்கள்தொகை தகவலை மட்டுமல்ல, பல்வேறு சாதிகளின் வருமானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக அந்தஸ்து பற்றிய விவரங்களை இந்த கணக்கெடுப்பின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

மோடி அரசு சாதிவாரி கணக்கெடுப்புத் தரவை வெளியிட மறுக்கும் பட்சத்தில், ஒவ்வொரு மாநில அரசும், குறைந்தபட்சம் பாஜக அல்லாத மாநிலங்கள் அதனை தாங்களாகவே முன்வந்து செய்ய வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சாதிப் பிரிவினை என்பது இந்தியாவின் மறைக்க முடியாத அசிங்கமான உண்மை. தமிழகத்தில் சாதிவெறி ஒழிய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது சரிதான். தமிழக அரசு பிஹாரைப் போல செயல்பட்டு சாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிட வேண்டும். சாதி பற்றிய விரிவான தகவல்கள் இருந்தால் மட்டுமே சாதிவெறியை ஒழிப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளை நாம் தொடங்க முடியும்.

- பிரவின் சக்கரவர்த்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE