கர்நாடகா | தமிழக எல்லையில் உள்ள பட்டாசு குடோனில் வெடிவிபத்து: தமிழர்கள் 13 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தமிழர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் கர்நாடக - தமிழக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று மாலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு பெட்டிகளை இறக்கும் போது திடீரென தீப்பிடித்ததில் பட்டாசு குடோன் எரிந்து நாசமானது. நகர் பகுதியில் இருந்த பட்டாசு குடோன் என்பதால் தீ மற்ற கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதில் அருகில் இருந்த சில கடைகள் எரிந்து நாசமாகின. அங்கு நிற்கவைக்கப்பட்டிருந்த 9 வாகனங்களும் சேதமாகின.

தீபாவளி பண்டிகைக்காக குடோனில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து கட்டுப்படுத்த முடியவில்லை. 9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றன. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதுமாக புகை மூட்டமாக காணப்பட்டது.

பட்டாசு கடை நடத்தி வரும் நவீன், தனது ஊழியர்களுடன் கன்டெய்னர் வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கிக்கொண்டிருக்கும்போது இந்த எதிர்பாரா விபத்து ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE