பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 190 கிமீ தொலைவுக்கு சுங்கப்பாதை: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தகவல்

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 190 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

உலக அளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் இருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதனால் சில நிறுவனங்கள் ஹைதராபாத், மும்பை ஆகிய இடம்பெயர தொடங்கியுள்ளன. எனவே கர்நாடக அரசு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்நிலையில் கர்நாடக துணை முதல்வரும் பெங்களூரு மாநகர வளர்ச்சித் துறை அமைச்சருமான‌ டி.கே.சிவகுமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக ரூ.50 ஆயிரம் கோடி செலவில் 190 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஓசூர் சாலை, ஓல்ட் மெட்ராஸ் சாலை, பெல்லாரி சாலை, மைசூரு சாலை, கனகபுரா சாலை, கிருஷ்ணராஜபுரம், யஷ்வந்த்புரம், சில்க் போர்டு, சாலுக்கியா சதுக்கம் உள்ளிட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த சுரங்கப்பாதைகள் அமையவிருக்கின்றன.

இத‌ற்காக 8 நிறுவனங்கள் திட்ட வரைவு அறிக்கைகளை தயாரித்து கொடுத்துள்ளன. அதற்காக பொது ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால் மத்திய அரசிடம் நிதியுதவி கேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசியுள்ளேன். இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE