''இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான சவால்'' - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இண்டியா கூட்டணி பாஜகவுக்கு உண்மையான ஒரு சவால் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது: இண்டியா கூட்டணி உண்மையான ஒரு சவால் என்றே நான் கருதுகிறேன். பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் எந்த ஒரு தேர்தலையும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. களத்தில் உள்ள எளிய தொண்டர்கள் முதல் உயர்மட்ட தலைவர்கள் வரை ஒவ்வொருவருமே தேர்தலை மிக கவனமாகப் பார்க்கிறோம். பிரதமர் மோடி எங்களை வழிநடத்துவார்.

பிரதமர் மோடியின் ஆட்சிக் கால சாதனைகளின் பட்டியலை நாங்கள் மக்கள் முன் வைப்போம். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வாக்களிக்கும்படி வேண்டுகோள் விடுப்போம். எதிர்க்கட்சிகளின் தவறான தகவல்கள், இரட்டை நிலைப்பாடு உள்ளிட்டவற்றை அம்பலப்படுத்துவோம். சிலர் அச்சம், ஆணவம், சுயநலம் ஆகியவை காரணமாக கூட்டணி வைக்கிறார்கள். அவர்களிடம் கொள்கைகள் இருப்பதில்லை. கடின உழைப்பின் மூலம் மக்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதே எங்களின் இடைவிடாத முயற்சியாக இருக்கும்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் நமது நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அரசியல் உரிமை கிடைப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்த சட்டத்தைக் கொண்டு வர உண்மையான அக்கரையை காட்டவில்லை. ஒருவருமே இதற்கு ஆதரவாக இல்லை. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும் அவர்கள் அதனை செய்யவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுவோம் என அவர்கள் வாக்குறுதியும் அளிக்கவில்லை.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். கடந்த 75 ஆண்டுகளாக அவரும் அவரது குடும்பமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பின்தங்கிய மக்களுக்கும் என்ன செய்தார்கள் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். தனது கடமையைச் செய்யாமல் பிறரை குறை சொல்லக்கூடிய கட்சி காங்கிரஸ். இதுதான் சந்தர்ப்பவாத அரசியல். இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE