உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா: அக்.15-ல் ஹ‌ம்சலேகா தொடங்கி வைக்கிறார்!

By இரா.வினோத்


பெங்களூரு: உலகப் புகழ்ப்பெற்ற மைசூரு தசரா திருவிழாவை கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஹ‌ம்சலேகா வரும் 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.

கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூருவை ஆண்ட உடையார் மன்னர்கள் போரில் வென்றதை நினைவுக்கூரும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கர்நாடக அரசின் சார்பில் இந்த விழா ஆண்டுதோறும் அரசு திருவிழாவாக‌ பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், 413-வது மைசூரு தசரா விழாவை கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஹ‌ம்சலேகா வரும் அக்டோபர் 15ம் தேதி காலை 10 மணியளவில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்வில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, மைசூரு மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

வரும் 24-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் தசரா விழாவை ஒட்டி மைசூருவில் உணவு திருவிழா, திரைப்பட திருவிழா, கிராமிய விழா, மலர் கண்காட்சி, பொருட்காட்சி ஆகியவற்றை முதல்வர் சித்தராமையா பொம்மை தொடங்கி வைக்கிறார். இதுதவிர சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுவர், இளைஞர், மகளிர், முதியவர் தசரா நிகழ்ச்சிகளும், இசை, நடனம், நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தசராவின் இறுதிநாளான அக்.24-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க ஜம்போ சவாரியை (யானை ஊர்வலம்) நடைபெறுகிறது. அப்போது 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் சிலை வைக்கப்பட்டு மைசூருவில் பிரதான சாலைகளில் ஊர்வலமாக கொண்டுவரப்படும். இதைத் தொடர்ந்து நடைபெறும் தீப்பந்த விழா நடைபெறுகிறது.

தசராவையொட்டி மைசூரு அரண்மனை, சாமுண்டீஸ்வரி கோயில், கிருஷ்ணராஜசாகர் அணை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை வண்ண மின் விளக்குகளால் அங்கரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இந்த‌ விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் மைசூருவில் குவிய உள்ள‌னர். இதனால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE