குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றிக் கோட்டுக்கு மிக அருகில் வந்து வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது காங்கிரஸ். படேல் சமூகத்தினரின் அதிருப்தி, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அதிருப்தி, விவசாயிகள் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை என கடும் நெருக்கடிகளுக்கு இடையே வெற்றிக் கோட்டை போராடி தொட்டிருக்கிறது பாஜக.
படேல் சமூகத்தின் அதிருப்தி
சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக-வின் நட்பு வளையத்தில் இருந்த படேல் சமூகத்தின் தற்போதைய அதிருப்தியே பாஜக-வுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. படிதார் எனப்படும் படேல் சமூகம் பெருமளவு வசிக்கும் செளராஷ்டிரா பகுதியில்தான் பாஜக-வுக்கு பாதிப்புகள் அதிகம். அந்தப் பகுதியிலிருக்கும் 54 தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்திருக்கிறது பாஜக.
குறிப்பாக படேல் சமூகத்தினரின் உட்பிரிவான ‘கட்வா’ படேல் சமூகத்தினர் அடர்த்தியாக இருக்கும் மோர்பி, கிர் சோம்நாத், அமிரேலி ஆகிய மாவட்டங்களில் பாஜக தோல்வியை சந்தித்திருக்கிறது. இங்கெல்லாம் படேல் சமூகத்தைச் சேர்ந்த பருத்தி மற்றும் கடலை விவசாயிகள் அதிகம் வசிக்கிறார்கள். படேல் சமூகத்தின் இட ஒதுக்கீடு அதிருப்தியுடன் விவசாயப் பொருளுக்கு சரியான விலை கிடைக்காத அதிருப்தியும் சேர்ந்துகொண்டதால் இங்கெல்லாம் கடும் இழப்பை சந்தித்திருக்கிறது பாஜக. கூடுதலாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ‘ஏக்தா மஞ்ச்’ தலைவரான அல்பேஷ் தாக்கூரின் தொடர் பிரச்சாரங்களால் மொத்தமிருக்கும் 26 பழங்குடியின தொகுதிகளில் 12 தொகுதிகளை காங்கிரஸிடம் பாஜக இழந்திருக்கிறது.
நகரங்களில் வெற்றி!
அதேசமயம் தொழில் சமூகங்கள் நிறைந்த குஜராத்தின் ஆறு முக்கிய நகரங்களின் 40 தொகுதிகளில் 36-யை கைப்பற்றியிருக்கிறது பாஜக. தலைநகர் அகமதாபாத்தில் மட்டும்தான் அந்தக்கட்சி 16 தொகுதிகளில் நான்கை இழந்திருக்கிறது. மற்ற முக்கிய நகரங்களான சூரத், வதோதரா, ராஜ்கோட், பவன் நகர், ஜாம் நகர் ஆகிய நகரங்களில் அனைத்து தொகுதிகளையும் பாஜக அள்ளிவிட்டது. ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்தது நகரப் பகுதிகளில் பாஜக-வுக்கு பயன் அளித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள் வியாபாரிகள். சில மாதங்களுக்கு முன்பு அருண் ‘ஜேட்லி, சூரத் நகரின் ஜவுளி வியாபாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு சில உறுதிமொழிகளை அளித்ததும் சூரத்தின் வெற்றிக்குக் காரணமாக கூறப்படுகிறது. அதேசமயம், எதிர்காலத்தில் மதக் கலவரங்களால் தங்களது தொழில் பாதிக்கக்கூடாது என்று கருதிய வியாபாரிகள் பயத்தின் காரணமாக பாஜக-வுக்கு வாக்களித்துள்ளனர் என்கிற கருத்தும் பரவலாக நிலவுகிறது. இவ்வாறாக நகர்ப்புறங்களில் கிடைத்த இந்த வெற்றியே பாஜக ஆட்சியை தக்க வைத்ததற்கு காரணமாக அமைந்திருக்கிறது.
காங்கிரஸின் விரக்தி மனநிலை
கடந்த ஐந்து சட்டசபை தேர்தல்களில் அதிகபட்சமாக 59 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 77 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸின் இந்த எழுச்சிக்கான பெருமை முறையே ராகுல் காந்தி, ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் இவர்களையே சாரும். குறிப்பாக ராகுலின் பக்குவப்பட்ட பேச்சும், மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசிய மணிசங்கர் அய்யர் மீது அவர் எடுத்த நடவடிக்கைகளும் குஜராத் மக்களை கவர்ந்தன என்கிறார்கள் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.
அதேசமயம் குஜாராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பாலும் விரக்தி மனநிலையிலேயே இருந்தனர். ராகுல் வந்து செல்லும்போது மட்டுமே அவர்களிடம் உற்சாகத்தைக் காண முடிந்தது. தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக ஜூன் மாதத்திலேயே பாஜக பூத் கமிட்டி பணிகளைத் தொடங்கிய நிலையில், நவம்பர் மாதம்தான் காங்கிரஸ் இந்தப் பணிகளை தொடங்கியது. பாஜக ஒவ்வொரு பூத் கமிட்டிக்கும் 21 நபர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து, அவர்களில் ஒவ்வொரு நபரும் 46 ஓட்டுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட நிலையிலும் உள்ளூர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் அதனை வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். இதனாலேயே கோத்ரா, தோல்கா ஆகிய தொகுதிகளில் 300-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்திருக்கிறது. தவிர, ஆயிரம் தொடங்கி மூவாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 15 தொகுதிகளை இழந்திருக்கிறது காங்கிரஸ். உள்ளூரில் காங்கிரஸில் ஓரளவு அறியப்படும் நபர்களான அர்ஜூன் மோத் வாடியா, சித்தார்த் படேல், சக்திசிங் கோஹில், துஷார் சவுத்ரி இவர்கள் அனைவருமே தோல்வியடைந்தார்கள்.
அடிபட்ட புலி!
தேர்தல் முடிவுகள் குறித்து அங்கிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆட்சியை பிடித்திருப்பதன் மூலம் பாஜக வெளியே மகிழ்ச்சியாகக் காட்டிக் கொண்டாலும் உள்ளே அது கடுமையாக காயப்பட்டிருக்கிறது. அடிப்பட்ட புலியின் மனநிலையில் பாஜக நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதனால், இத்துடன் ஆட்டம் முடிந்துவிட்டது என்று எதிர்பார்க்க முடியாது. சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவை தேர்தலுக்கு முன்பாக ஆறு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாக மாற்றியது பாஜக. பிரச்சாரங்களில் 150 + என்று கூறி வந்த பாஜக, தற்போது 99 இடங்களை மட்டுமே பெற்றிருப்பதை கவுரவக் குறைவாகவே அந்தக் கட்சி கருதுகிறது. எனவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை அதிருப்தி எம்எல்ஏ-க்களாக்கும் வேலையை பாஜக செய்யத் தயங்காது...” என்கிறார்.
கோரிக்கை நிறைவேறாததால் தொடரும் படேல் சமூகத்தினரின் போராட்டங்கள், ஜிக்னேஷ் மேவானியின் வெற்றியின் மூலம் ஏற்பட்டுள்ள பட்டியல் சமூகத்தினரின் எழுச்சி, காங்கிரஸுக்கு கூடுதலாக கிடைத்திருக்கும் வலிமை இவற்றின் மூலம் குஜராத் அரசியல் முன்பைவிட தீவிரம் அடைவதற்கான வாய்ப்புகளே அதிகம். ‘இறுதியில் சிரிப்பவர்களே வெற்றியாளர் கள்’ என்று ஒரு பழமொழி உண்டு. நடந்து முடிந்த தேர்தலின் முடிவில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருப்பதன் மூலம் பாஜக சிரிக்கிறது!
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago